PM Modi in Russia: `எனது ஒரே குறிக்கோள் இதுதான்…’ – ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி பேசியதென்ன? | Putin

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்த நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்த நாட்டு பாரம்பர்ய முறைப்படி ராணுவ மரியாதையும், சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.

மோடி – புதின்

அப்போது இரு தலைவர்களும் அதிகாரபூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தொடர்பாக வெளியான தகவலில், ரஷ்ய அதிபர் புதின், “மதிப்பிற்குரிய பிரதமரே! அன்பான நண்பரே! வணக்கம், உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாளை அதிகாரபூர்வ உரையாடல்களை நிகழ்த்துவதற்கு முன்னால் இன்று, இந்த வீட்டுச் சூழலில், அமைதியாகப் பேசலாம். ஒருபுறம் இது நான் வசிக்கும் அதிகாரபூர்வ இல்லம். மறுபுறம் நான் சக ஊழியர்களுடன் பணிபுரியும் வளாகம். நீங்கள் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்.

இது தற்செயலான வெற்றியல்ல… பல ஆண்டுகளாக நீங்கள் தலைவராக இருந்ததன் விளைவு என்று நினைக்கிறேன். நீங்கள் மிகவும் ஆற்றல்மிக்கவர். 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்களில் முடிவுகளை எப்படி அணுகுவது என்பது உங்களுக்கு தெரியும். அநேகமாக, இப்போது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு என்றே கருதுகிறேன். அதிகரித்த மக்கள்தொகை எண்ணிக்கை வெறும் எண்கள் மட்டுமல்ல, இதன் பொருள் மக்கள் தங்கள் குடும்பங்களைத் திட்டமிடுகிறார்கள்.

மோடி – புதின்

அவர்களின் வாழ்க்கையைத் திட்டமிடுகிறார்கள். அப்படியானால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்கள் நிலைத்தன்மையை உணர்கிறார்கள். ஒரு நாட்டுக்கு இது மிக முக்கியமானது. முதலில், நான் இதற்காக வாழ்த்துகிறேன். இரண்டாவதாக, உங்களைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணித்துள்ளீர்கள், மக்கள் அதை உணர்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

புதினுக்கு பதிலளித்த பிரதமர் மோடி,“ஒரு நண்பரின் வீட்டிற்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்திருக்கிறீர்கள். இந்த சந்திப்புக்காக இதுபோன்ற ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை உருவாக்கியதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் சொல்வது சரிதான், இந்தியாவில் தேர்தல்கள் மிக முக்கியமானது, மிகப்பெரிய அளவில் அது நடந்து முடிந்திருக்கிறது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம், ஆம், இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் என்று கருதப்படுகிறது. மேலும் சுமார் 650 மில்லியன் மக்கள் நடந்துமுடிந்த தேர்தல்களில் வாக்களித்தனர்.

முதன்முறையாக கடந்த 60 ஆண்டுகளில், தொடர்ந்து மூன்றாவது முறையாக என் தலைமையிலான அரசு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு முன்னால் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூன்றுமுறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தாய்நாட்டிற்கு சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நான் 10 ஆண்டுகளாக சேவையாற்றிவருகிறேன்.

சீர்திருத்தம், செயல்படுத்துதல், மாற்றம் இதுதான் எனது கொள்கை. இந்திய மக்கள் இந்தக் கொள்கைக்காகத்தான் வாக்களித்தனர். எனது மூன்றாவது முறை ஆட்சியில் நான் மூன்று மடங்கு கடினமாக உழைப்பேன் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கிறது… அதுதான் என் நாடும், நாட்டு மக்களும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.