JIO,AIRTEL,VODAFONE: செல்போன் நிறுவனங்களின் திடீர் கட்டண உயர்வு! – காங்கிரஸ் எழுப்பும் சந்தேகங்கள்

இந்தியாவின் முன்னணி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒரேநேரத்தில் சொல்லிவைத்தார்போல கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயனாளர்கள் மத்தியில் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசும் தனியாரின் இந்த கட்டண உயர்வைப் பற்றி கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக சாடியிருக்கிறது.

ஜியோ, வோடஃபோன், ஏர்டெல்…

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் உபயோகிக்கும் செல்போன் நெட்வொர்க்காக ரிலையன்ஸ் – ஜியோ, பாரதி – ஏர்டெல் மற்றும் வோடஃபோன் – ஐடியா ஆகிய மூன்றும் இருக்கின்றன. குறிப்பாக, இந்திய செல்போன் நெட்வொர்க் சந்தையைப் பொறுத்தவரையில், இந்திய மக்களில் சுமார் 42 கோடி பேர் ஜியோவையும், 39 கோடி பேர் ஏர்டெல்லையும், 22.37 கோடி பேர் வோடஃபோன் ஐடியாவையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில்தான் இந்த மூன்று நிறுவங்களும் கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் புதிய கட்டண உயர்வை அதிரடியாக அமல்படுத்தியிருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு நிறுவனமும் அதிகபட்சமாக 15% முதல் 20%-க்கும் கூடுதலாக கட்டண உயர்வை மேற்கொண்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், செல்போன் நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வை பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருப்பதோடு, பா.ஜ.க அரசை கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறது. குறிப்பாக இதுகுறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கடுமையாகப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற போதும், தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டும் போக்கை குறைத்துக்கொள்ளவில்லை. கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், தனியார் செல்போன் நிறுவனங்களான Reliance Jio, Bharti Airtel மற்றும் Vodafone Idea (Vi) ஆகிய மூன்றும் சராசரியாக 15% தங்களின் கட்டணங்களை அதிகரித்திருக்கின்றன.

மோடி – அம்பானி (2013)

குறிப்பாக, கடந்த ஜூன் 27-ம் தேதியன்று, ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டணங்களை 12% -லிருந்து 27% ஆக உயர்த்தியது. அதற்கடுத்து, ஜூன் 28-ம் தேதியன்று, ஏர்டெல் அதன் கட்டணங்களை 11%-லிருந்து 21% ஆக உயர்த்தியது. அதைத்தொடர்ந்து, ஜூன் 29-ம் தேதியன்று, வோடபோன் ஐடியாவும் அதன் கட்டணங்களை 10%-லிருந்து 24% ஆக உயர்த்தியது. அதாவது, மூன்று நிறுவனங்களும் ஆலோசனை நடத்தி வெறும் 72 மணி நேரத்தில் செல்போன் கட்டண உயர்வை அறிவித்தது இதன்மூலம் நன்கு தெளிவாகிறது.

நிறுவனம் வாரியாக உயர்த்தப்பட்ட கட்டணங்களின் விவரம்:

• ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயனருக்கு ரூ.30.51 அதிகரித்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.17,568 கோடி!

• ஏர்டெல் பயனர்கள் ஆண்டுக்கு ரூ.22.88 கோடி வளர்ச்சி கண்டுள்ளனர். அதாவது, ஆண்டுக்கு ரூ.10,704 கோடி!

• வோடபோன் ஐடியா பயனர்கள் ரூ.24.40 கோடி வளர்ச்சி கண்டுள்ளனர், அதாவது ஆண்டுக்கு ரூ.6,552 கோடி!

ரன்தீப் சுர்ஜேவாலா

இந்த கட்டண உயர்வால் 109 கோடி செல்போன் பயனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.34,824 கோடி கூடுதல் செலவாக உருவாகியிருக்கிறது. குறிப்பாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(TRAI) அறிக்கைப்படி, இந்த செல்போன் நிறுவனங்கள் ஒவ்வொரு செல்போன் வாடிக்கையாளரிடமிருந்தும் மாதத்திற்கு ரூ.152.55 பைசா சம்பாதிக்கின்றன. இது இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது” எனத் தரவுகளுடன் விளக்கியிருக்கிறார். மேலும், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்டமான கேள்விகளையும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பியிருக்கிறார்.

`இந்திய மக்களுக்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்!’

கேள்வி 1: நாட்டின் செல்போன் பயனர்களின் பங்குகளில் 92% பயனர்களைக் கொண்டிருக்கும் இந்த மூன்று தனியார் செல்போன் நிறுவனங்களும் எப்படி தன்னிச்சையாக செல்போன் கட்டணத்தை உயர்த்தலாம்? மோடி அரசின் மேற்பார்வை அல்லது கட்டுப்பாடு இல்லாமல் ஆண்டுக்கு ரூ. 34,824 கோடியை தன்னிச்சையாக உயர்த்துவது சாத்தியமா?

கேள்வி 2: 109 கோடி செல்போன் பயனர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மோடி அரசும் TRAI-ம் தங்கள் கடமையையும் பொறுப்பையும் கைவிட்டது ஏன்?

கேள்வி 3: 109 கோடி இந்தியர்களின் மீது ரூ.34,824 கோடி சுமத்தப்பட்டு கொள்ளையடிக்கும் இந்த கட்டண உயர்வு விவகாரம், நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை நிறுத்திவைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

பிரதமர் மோடி

மழுப்பலாக பதிலளித்த மத்திய அரசு:

இந்த நிலையில் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கும் மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம், “இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(TRAI) கட்டுப்பாட்டின்கீழ் செல்போன் சேவைகளுக்கான வாடிக்கையாளர்கள் கட்டணத்தை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைத்துக் கொள்கின்றன. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்த நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியிருக்கின்றன. இந்தியாவில் உள்ள இந்த செல்போன் கட்டண உயர்வு உலக நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளை விடவும் இந்தியாவின் செல்போன் சேவைகளுக்கான வாடிக்கையாளர் கட்டணம் குறைவாகவே இருக்கிறது. மேலும், மத்திய அரசின் மேம்பட்ட கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில், செல்போன் சேவைக் கட்டணம் பரவலாகக் குறைந்திருக்கிறது!” என பதிலை அளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88