தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை உலக நாடுகளின் புகழ்பெற்ற லண்டன், பாரீஸ், நியூயார்க், வாஷிங்டன் டிசி போன்ற நகரங்களுக்கு இணையாகத் தரம் உயர்த்த, 1996-ம் ஆண்டில் சென்னையின் மேயராகப் பதவி வகித்த மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்ததே சிங்காரச் சென்னை திட்டம்.
சாலை உள்கட்டமைப்பு வசதிகள், குப்பையற்ற நகரம் போன்றவற்றை முன்னிறுத்தி, சிங்காரச் சென்னை வெர்ஷன் 1.O-வைச் செயல்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகத் தற்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்புவகிக்கும் சூழலில் சிங்காரச் சென்னை வெர்ஷன் 2.O திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
தூய்மையான, பசுமையான நகரம், கடற்கரை, கலாசாரம், சுவரொட்டிகள் இல்லாத சென்னை, ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு, கழிவுநீர் குழாய் இணைப்பு, தரமான கழிவறைகளைப் பயன்படுத்துதல், சென்னை தினம், சென்னை சங்கமம் உள்ளிட்டவை இந்தத் திட்டத்தில் அமல்படுத்தப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக சென்னையை மிகப்பெரிய அளவில் உருமாற்றம் செய்யும் திட்டமே சிங்காரச் சென்னை 5.O
தமிழ்நாடு, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்கொண்ட மாநிலமாக அடுத்த பத்தாண்டுக்குள் வளர வேண்டும் என்பது மாநில அரசின், கனவு தமிழ்நாட்டின் இலக்குகளின் ஒன்று. அதற்கு வலுவூட்டும் வகையில் சென்னை மாநகரை உலகம் வியந்து போற்றும் விதமாக உருமாற்றம் செய்ய வேண்டும். அதற்குக் கீழ்க்கண்ட திட்டங்களைப் படிப்படியாக அமல்படுத்தலாம். அவ்வாறு செய்தால் லண்டனுக்கு, பாரிஸுக்கு, நியூயார்க்குக்கு இணையாக சிங்கார சென்னையும் உலக நாடுகளின் புகழ்பெற்ற நகரமாக மிளிரும்.
New York Skyline
London Eye
Sri Lanka Lotus Tower
London Canary wharf
Paris Food Street
தேசிய இயற்கைப் பூங்கா – பார்வையாளர் மையம்
சென்னை சரக்கு / மெட்ரோ / அலங்காரப் படகு சேவைகள்
(Chennai Cargo shipping /Metro /Boat Services)
நவீன வெள்ளநீர் மேலாண்மை திட்டம்
ஆற்றின் கரையோரம் பூங்காக்கள்
அடையாற்றில் அலங்காரப் படகு விடுதிகள்
சென்னை ஸ்கைலைன் (Chennai Skyline)
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஸ்கைலைன் (New York Skyline) போன்று சென்னை ஸ்கைலைன் (Chennai Skyline) அமைக்கலாம்.
சென்னையிலும் ஸ்கைலைன் உள்ளது. ஆனால், அவை மிகக் குறைந்த அளவில் குறைந்த அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களால் நிரம்பியுள்ளது. அதிகபட்சமாக 500 உயரமான கட்டடங்களே இங்கு இருக்கின்றன. அந்த வகையில், கிண்டியில் தொடங்கி பிராட்வே வரையிலான இடைப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான சுமார் 20 அடுக்கு மாடிகளைக்கொண்ட கட்டங்களை அமைக்கலாம். அதில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பெரும் நிறுவனங்களின் அலுவலகங்கள் போன்றவற்றுக்கு இடமளிக்கலாம். அவ்வாறு செய்யும்போது அந்தப் பகுதியே நியூயார்க்கின் ஸ்கைலைன்போல சென்னை ஸ்கைலைனாக உருமாற்றம் அடையும்!
சென்னை கெனரி வார்ஃப் (Chennai Canary Wharf)
புகழ்பெற்ற லண்டன் மாநகர வணிகப்பகுதியான கெனரி வார்ஃப் (canary wharf) போல சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள நுங்கம்பாக்கத்தை மாற்றம் செய்யலாம்.
லண்டனின் ஒரு குறிப்பிட்ட பகுதிதான் கெனரி வார்ஃப். இது அதிக அளவிலான வர்த்தக நிறுவனங்களில் தலைமை அலுவலகங்களைக் கொண்ட பகுதியாகும். இதேபோல நுங்கம்பாக்கத்தின் சாலையின் இருபுறமும் நவீன அடுக்குமாடி கட்டடங்களை உருவாக்க வேண்டும். அங்கே அனைத்து வங்கிகளின் தலைமை அலுவலகங்கள், அரசின் நிர்வாக அலுவலகங்கள், செய்தித்தாள் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை சார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு குறிப்பிட்ட வணிகப்பகுதியாக மாறும். இங்கு உலக நாடுகளின் கிளை நிறுவனங்களை (Satellite Offices) அமைக்கலாம். அதன் பின்பகுதியில் இத்தகைய நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைக்கலாம். இதனால் அவர்களது வொர்க் லைஃப் பேலன்ஸை (Work life Balance) சமமாக வைத்திருக்க உதவும்.
கூடுதலாக ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளியில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நவீன உணவகங்கள், சிற்றுண்டிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகளை உள்ளடக்கிய வணிக வளாகங்கள் போன்றவற்றையும் உருவாக்கலாம். அதோடு, அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களின் மாடிகளில் மாடித் தோட்டங்களை உருவாக்கும்போது, அது பசுமைப் படலமாக (Green Cover) மாறும். இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் இடமாக நுங்கம்பாக்கம் சாலை மாறி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
சென்னை ஐ (Chennai Eye)
லண்டனின் புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள லண்டன் ஐ (London Eye) போன்ற மிகப்பெரிய ராட்டினத்தை சென்னையில் அமைக்கலாம். அது சிங்கார சென்னை 5.0 திட்டத்துக்கு மேலும் வலுவூட்டும்.
லண்டனின் எந்தப் பகுதியில் இருந்து அன்னார்ந்து பார்த்தாலும் ‘லண்டன் ஐ’ நமது பார்வைக்குப்படும். அந்தளவுக்கு சுமார் 445 அடி உயரம்கொண்ட ராட்டினம் அது. உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால், சென்னை அண்ணாசாலையில் இருக்கும் எல்.ஐ.சி கட்டடம் ஏறக்குறைய 180 அடி. அதாவது எல்.ஐ.சி கட்டடத்தைவிட தோராயமாக இரண்டரை மடங்குப் பெரியது ‘லண்டன் ஐ’ ஜெயண்ட் வீல்!
அதேயளவில் பிரமாண்டமான ராட்டினம் ஒன்றை மெரினாவின் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கலாம். இந்த ராட்டினத்தில் கண்ணாடிப் பெட்டிகளை அமைத்து, அவற்றில் குளிரூட்டும் வசதிகள் செய்யப்பட வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகள் சென்னையில் பிரமாண்டத்தை ரசிக்க ஏதுவாக நவீன இருக்கைகள் (Sofa) அதனுள் அமைப்பது அவசியம். லண்டன் ஐ பின்பற்றி, ஏற்கனவே டெல்லியின் அருகே உள்ள யமுனை ஆற்றங்கரையில் சுமார் 150 அடியில் டெல்லி ஐ (Delhi Eye) அமைக்கப்பட்டிருக்கிறது.
அதைவிட உயரம் அதிகமானதாக ‘சென்னை ஐ’ உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இதில் அமர்ந்து சென்னையை ரசிக்க உரிய கட்டணங்களை நிர்ணயித்து வசூல் செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
(இன்னும் காண்போம்!)