சித்தராமையா vs டி.கே சிவக்குமார்… கர்நாடக காங்கிரஸ் மோதல் போக்கும் எதிர்காலமும்?!

கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் இருக்கிறார்கள். 2023-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மையான தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க-விடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.

சித்தராமையா

ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள்கூட நிறைவடையாத சூழல், முதல்வர் பதவியை மையமாகக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் தொடங்கியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியபோதே, முதல்வர் பதவியைப் பிடிப்பதற்கான முயற்சியில் டி.கே.சிவக்குமார் இறங்கினார்.

டி.கே.சிவக்குமாருக்குத்தான் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டுமென்று அவருடைய ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பெரும் வெற்றிக்கு டி.கே.சிவக்குமார்தான் காரணம் என்று அவர்கள் வாதிட்டனர். அதுதான் உண்மையும்கூட. ஆனால், டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்திவிட்டு, சித்தராமையாவையே முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை.

டி.கே.சிவக்குமார்

மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டால், முதல்வர் பதவியை எப்படியாவது வசப்படுத்திவிடலாம் என்பது டி.கே.சிவக்குமாரின் கணக்காக இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தென் இந்தியாவில் பா.ஜ.க அதிகமான இடங்களைப் பிடித்தது கர்நாடகாவில்தான்.

இந்தச் சூழலில்தான், டி.கே.சிவக்குமாரை முதல்வராக்க வேண்டுமென்ற குரல் எழுந்திருக்கிறது. இது, கர்நாடகா காங்கிரஸுக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சர்ச்சையை முதலில் தொடங்கிவைத்தவர், ஒக்காலிக மஹாசமஸ்தானத்தின் மடாதிபதி சந்திரசேகர் சுவாமி ஜி.

ராகுல் காந்தி

ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக ஒக்காலிக மஹாசமஸ்தானத்தின் மடாதிபதி பேசியதற்கு சாதி முடிச்சு போடப்படுகிறது. கர்நாடகாவில் 17 சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட லிங்காயத், 15 சதவிகித மக்கள்தொகையைக் கொண்ட ஒக்கலிகா ஆகிய இரண்டு சமூகங்களும்தான் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில், டி.கே.சிவக்குமார் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருக்கிறார்.

டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், கர்நாடகாவில் துணை முதல்வர் பதவியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளராகக் கருதப்படும் மூத்த அமைச்சர் கே.என்.ராஜண்ணா. துணை முதல்வர்களை அதிகப்படுத்தினால், எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை உள்பட பல சமூகங்களின் ஆதரவை அதிகரிக்க முடியும் என்கிறார் ராஜண்ணா.

சித்தராமையா

ஆனால், டி.கே.சிவக்குமாருக்கு செக் வைப்பதற்காகவே இந்த கோரிக்கையை அவர் முன்வைக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும், சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் ஆகியோரை உள்ளடக்கிய ‘அஹிண்டா’ என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. சித்தராமையாவை பதவியிலிருந்து இறக்கினால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது.

இதனிடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி டி.கே. சுரேஷ் பெங்களூரில் தோல்வி அடைந்தார். இந்தத் தோல்விக்கு, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களின் சதியே காரணம் என டிகேஎஸ் தரப்பினர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினர். இதுவும் மாநில அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியது.  

டி.கே.சிவக்குமார் முதல்வர் ஆவதற்கு வழிவிட வேண்டுமென்று சித்தராமையாவுக்கு கோரிக்கை வைக்கப்படும் நிலையில், சித்தராமையா பதவி விலக வேண்டுமென்ற போராட்டத்தை பா.ஜ.க நடத்தியிருக்கிறது. மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தால் நிலம் ஒதுக்கீடு நடைபெற்றதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ஆகவே, சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க போராட்டம் நடத்துகிறது.

எடியூரப்பா

பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது போக்ஸோ வழக்கு இருக்கிறது. அதில், தன்னை தற்காத்துக்கொள்ள உயர் நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். இந்த நிலையிலும், காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டுமென்று எடியூரப்பா கோரிக்கை வைத்திருக்கிறார்.

“காங்கிரஸ் கட்சிக்கு துணிச்சல் இருந்தால், ஆட்சியைக் கலைத்துவிட்டு உடனடியாக கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும். இப்போது தேர்தல் நடத்தினால் குறைந்தபட்சம் 150 இடங்களை பா.ஜ.க பெறும்” என்கிறார் எடியூரப்பா.

சித்தராமையா, எடியூரப்பா

முதல்வர் பதவியைக் குறிவைத்து, கர்நாடகா காங்கிரஸுக்குள் கோஷ்டி மோதல் தீவிரமடைந்திருப்பதால்தான், அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கிறது. இந்த விவகாரத்தில், காங்கிரஸின் தேசியத் தலைமை உடனடியாகத் தலையிடாவிட்டால் நிலைமை மோசடையும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88