கூடங்குளம் அணு உலை பணிக்கு வந்த நேபாள தொழிலாளர்கள் – உள்ளூர் மக்களின் எதிர்ப்பும் போராட்டமும்!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு உலைகள் செயல்பட்டு வருகின்றன. 3 மற்றும் 4-வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டன. 5 மற்றும் 6-வது அணு உலைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு உலை பணிகளில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் 4000-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

கூடங்குளம் அணு உலை

அணு உலைக்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைநிலைப் பணிகளில் கூட அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் உள்ளூர் மக்கள், அணு உலை நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலை கட்டுமானப் பணிகளுக்காக நேபாள நாட்டில் இருந்து 200 தொழிலாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனம் அழைத்து வந்தது.

இதுவரை வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் தற்போது வெளி நாட்டுத் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அழைத்து வந்திருப்பதை அறிந்த உள்ளூர் மக்களும் ஒப்பந்ததாரர்கள் அசோசியேசன் நிர்வாகிகளும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் முருகன் தலைமையில் கூடங்குளம் அணு உலை வாயிலில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் மக்கள் எதிர்ப்பு

கட்டுமானப் பணிக்காக அணு உலை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நேபாளத் தொழிலாளர்கள் சென்ற வாகங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. வள்ளியூர் டி.எஸ்.பி-யான யோகேஸ்குமார் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ, உள்ளூரில் படித்த இளைஞர்கள் பலர் வேலையின்றி தவிக்கும் சூழலில், வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

பின்னர் தனியார் ஒப்பந்த நிறுவனம், காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கூடங்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. அதில் பேசிய உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் பலரும், வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்வதை ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் பேச்சுவார்த்தை

அதைத் தொடர்ந்து நேபாள தொழிலாளர்களை மூன்று மாதங்களில் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதாக ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் புதிய வேலை வாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் முன்வந்தது. அதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் கூடங்குளம் அணு உலை முன்பாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88