“அன்று ஜானகி அம்மா செய்ததை சசிகலா செய்ய வேண்டும்..!” – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

இன்று கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசியவர், “பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுகவைப் பற்றி விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கான காரணங்களையும் கூறிவிட்டோம். இருப்பினும், அதிமுகவை குறை சொல்லும் நோக்கத்தோடு அண்ணாமலை பேசியிருக்கிறார். ‘இந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருந்தால் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு வந்திருக்கும்’ என்று தெரிவித்திருந்தார். அவர் மெத்தப் படித்தவர்; மிகப்பெரிய அரசியல் ஞானி; அவரின் கணிப்பு அவ்வாறாக இருக்கிறது‌‌. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியானது விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றது.

அந்த சட்டமன்றத் தொகுதியில், அதிமுக-வைச் சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர் ஆறாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவ்வளவுக்கும் அது நாடாளுமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தல் அல்ல! ஆனால், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை, நாங்கள் புறக்கணிப்பதான பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறியுள்ளோம்.

விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக எவ்வாறு நடந்துக் கொண்டது என்று நாடே அறியும். அங்கு தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. இது அண்ணாமலைக்கும் தெரியும். இது குறித்து அவருமே பேசியுள்ளார். இருந்தும் அவர் இப்படியான கருத்து கூறுகிறார். அது கண்டிக்கத்தக்கது. அது மட்டுமில்லாமல், அவர் வந்தப் பிறகு தான் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்தது போன்றதொரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். உண்மை அதுவல்ல. 2014ல் பாஜகவோடு பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தற்போது 2024ல் பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் பல அப்போதும் கூட்டணியில் இருந்தன. அப்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்‌. அன்றைக்கு அவர் அதிமுக வேட்பாளரைவிட நாற்பதாயிரம் வாக்குகள் தான் குறைவாகப் பெற்றார்.

ஆனால், இப்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளரை விட ஒரு லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். அப்படியென்றால் பாஜக எங்கே வளர்ந்துள்ளது? 2014-ல் பாஜக கூட்டணியில் பெற்ற நாடுகளுக்கு வாக்குகள் 18.80 சதவிகிதம். தற்போது பாஜக கூட்டணியில் பெற்ற வாக்குகள் 18.28 சதவிகிதம். எனவே, 0.52 சதவீதம் குறைவாகத் தான் பெற்றுள்ளார். அவர் தினந்தோறும் பேட்டிக் கொடுத்துக் கொண்டு அதன் வாயிலாக, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பாஜகவின் மாநிலத் தலைவராக வந்ததில் இருந்து என்ன புதியத் திட்டத்தை மத்திய அரசின் மூலமாக, தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்? எதுவுமே கிடையாது. மற்ற கட்சிகளை அவதூறாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அனைத்திலும் திமுக, அதிமுக இருவரும் போட்டியிட்டுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வெற்றிப் பெற்றார்கள். இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் நாங்கள் வெற்றிப் பெற்றோம். ஆகவே, தமிழக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும் வாக்களிக்கிறார்கள்” என்று அண்ணாமலையைத் தாக்கிப் பேசினார்.

மேலும், ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைவது குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதிமுக கட்சி, கடையில் விற்கும் பொருளல்ல; கட்சிக்கு விரோதமாக ஓபிஎஸ் செயல்பட்டதால் தான், அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதை நானோ, வேலுமணியோ செய்யவில்லை. அதிமுக தொண்டர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பின் நீக்கப்படுகிறார்.

சசிகலா எப்படி அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்? அவரே கட்சியில் இல்லை. பின் எப்படி ஒருங்கிணைப்பார்? அதுமட்டுமல்லால் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில் அவர் என்ன சொல்கிறார் என்றால் ‘அம்மா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாகச் செயல்பட்டேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கின்றேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காவோ ஆசைப்பட்டதில்லை’ என்று ‘நான் பதவியில் இல்லை’ என்பதை அவரே அப்போது அறிவித்துவிட்டார். பின் மூன்று வருடம் கழித்து மீண்டும், ‘ரீ எண்ட்ரி’ கொடுக்க இது ஒன்றும் கார்ப்பரேட் கம்பெனியல்ல; கட்சி. அவர்கள் உண்மையிலேயே அதிமுகவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையவேண்டும் என்று மனதார எண்ணினால், கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, ஜானகி அம்மா ஒரு அறிக்கை வெளியிட்டார். ‘அம்மா அவர்கள் தான் இக்கட்சியை ஏற்று நடத்துவார்கள். நான் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு புரட்சித்தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும்’ என்று சொன்னார். அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நன்றாகயிருக்கும் என தொண்டர்கள் கருதுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ ‘திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு துறைகளில் சம்பாதித்த சுமார் முப்பதாயிரம் கோடி பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற செய்தியை அன்றைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ மூலமாக தெரிவித்தார். அந்த உண்மைகள் எல்லாம் எங்கள் ஆட்சி அமைந்தபின் வெளிவரும்.

காலத்தால் அழியாத கல்விச் செல்வத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார், ஆர்.எஸ் பாரதி. அண்மைக்காலமாக அவர் இதுபோல் நிறையப் பேசுகிறார். வயது முதிர்வின் காரணமாக அவர் இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவருடைய பேச்சு, பட்டம் படித்தவர்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதற்கு பட்டம் படித்தவர்கள் எதிர்காலத்தில் தகுந்த பதிலடிக் கொடுப்பார்கள்.

ஸ்டாலின் – திமுக

ஆனைமலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றபோது, அவர்களைக் கூட அனுமதிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடலூர் பெட்ரோல் பங்க் ஒன்றில் இரண்டாயிரம் லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்ததாகவும், ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு 25 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. எனவே, தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலவற்றைப் பிடிக்கிறார்கள். சிலவற்றை பிடிப்பதில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டை ஆள்வதால் தான், இன்று சட்ட ஒழுங்கு அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது.

கோவை, நெல்லை என்று மட்டுமில்லை, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மேயர்கள், திமுக இருக்கின்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்கின்ற ஊழலுக்கு அளவே இல்லை‌. அதை பத்திரிக்கை நண்பர்கள் தான் நடுநிலையோடு வெளியில் கொண்டுவர வேண்டும். இங்கு நடக்கிற ஊழல்களைப் பத்திரிகை நண்பர்கள் வெளிப்படுத்தினால், திமுக அரசு காணாமல் போய்விடும். அந்தளவுக்கு ஊழல் மலிந்த அரசாக இந்த அரசு உள்ளது‌” என்று திமுக அரசைச் சாடினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88