இங்கிலாந்தில் (England) தற்போது நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கின் (Rishi Sunak) கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சி, தொழிலாளர் (Labour) கட்சியிடம் ஆட்சியை இழந்திருக்கிறது. மொத்தமாக 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 326 இடங்கள் வெல்ல வேண்டிய சூழலில், கன்சர்வேட்டிவ் கட்சியால் வெறும் 121 இடங்களில் மட்டுமே பெற முடிந்ததால், ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழந்திருக்கிறார்.
தோல்விக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக், மன்னிப்பு கேட்டு தோல்விக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேசமயம், தொழிலாளர் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்கவிருக்கிறார். இது தொடர்பாக, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸிடமிருந்து பதவியேற்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட கியர் ஸ்டார்மர், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்திருக்கும் டவுனிங் தெருவில் (Downing Street) இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, வெற்றிப் புன்னகையுடன் பேசிய கியர் ஸ்டார்மர், “மாற்றத்துக்கான பணி உடனடியாகத் தொடங்குகிறது. சந்தேகம் வேண்டாம், பிரிட்டனை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம். நமது நாட்டின் முதல் பிரிட்டிஷ்-ஆசியப் பிரதமராக அவர் (ரிஷி சுனக்) செய்த சாதனை, அவரின் கூடுதல் முயற்சி ஆகியவை யாராலும் குறைத்து மதிப்பிடப்படக் கூடாது. அதேசமயம், தன்னுடைய தலைமைக்கான அவரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நாங்களும் அங்கீகரிக்கிறோம்.
எங்கள் அரசில் நாட்டுக்கே முதலிடம். கட்சிக்கு இரண்டாம் இடம்தான். அரசியலுக்கான மரியாதையை நிச்சயம் மீட்டெடுப்போம். ஒரு நாட்டை மாற்றுவது என்பது ஒரு ஸ்விட்சை மாற்றுவது போல அல்ல. உலகம் இப்போதும் மிகவும் கொந்தளிப்பான இடமாகவே இருக்கிறது. மாற்றத்துக்குச் சிறிது காலம் எடுக்கும். ஆனால், மாற்றத்துக்கான வேலை உடனடியாகத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.