சேலம்: அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டிக் கொலை – லாட்டரி வியாபாரி உட்பட 8 பேர் கைது!

சேலம், அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று ள், அதிமுக நிர்வாகியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அன்னதானப்பட்டி அதிமுக பகுதிச் செயலாளராக இருந்து வருபவர் சண்முகம். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் மண்டலக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அடிக்கடி புதிய புதிய எண்ணிலிருந்து கால் வந்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பகுதியில் நடந்து வந்த லாட்டரி விற்பனை குறித்தும், சந்துக்கடை குறித்தும் போலீஸாருக்கு தகவல் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டருகே சென்றுக்கொண்டிருந்த சண்முகத்தை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ளது.

சண்முகம்

இதுகுறித்து மாநகர் காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்துபோன சண்முகத்தின் உறவினர்கள் கொலை செய்த நபர்களை கைது செய்யும் வரையிலும், உடலை வாங்கமாட்டோம் என அரசு மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உறவினர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “நாங்கள் ஏற்கனவே சொல்வதுபடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் காணப்படுகிறது. அதற்கு அதிமுக தொண்டர் பலியாகி இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்யவேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் “

என்று குறிப்பிட்டிருந்தார்.

கைதான சதீஷ்

இந்த நிலையில், அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த லாட்டரி வியாபாரி சதீஷ் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.