மகா., சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.1,898 கோடி நிதி – பாஜக, அஜித் பவார் தரப்பு ஆலைகளுக்கு வழங்கப்படுகிறதா?!

நாட்டில் சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னணியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு சொசைட்டி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைகளில் சில நலிவடைந்த நிலையில் நடத்த முடியாத நிலையில் இருக்கிறது. அது போன்ற சர்க்கரை ஆலைகளுக்கு மாநில அரசு நிதியுதவியை கடனாக கொடுக்கும். இந்த கடன் பொதுவாக சர்க்கரை ஆலைகளால் திரும்ப கொடுக்கப்படாத வழக்கமும் உள்ளது. தற்போது மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகம் மகாராஷ்டிரா சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.1,898 கோடியை கடனாக வழங்கி இருக்கிறது. இந்த தொகை மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் அரசு உத்தரவாதத்துடன் இக்கடன் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படும். மொத்தம் 13 சர்க்கரை ஆலைகளுக்கு இந்த தொகை கொடுக்கப்பட இருக்கிறது.

Manipur – அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு மேம்பாட்டுக்கழகம் வழங்கி இருக்கும் இந்த நிதி மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நடத்தும் 10 சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சதாரா மாவட்டத்தில் செயல்படும் கிஷன் வீர் சதாரா கூட்டுறவு சர்க்கை ஆலைக்கு அதிகபட்சமாக 350 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த சர்க்கரை ஆலை அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மற்றொரு சர்க்கரை ஆலையான தத்யசாஹேப் கோரா வரானா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ.க அரசியல்வாதி ஒருவரின் கூட்டாளிக்கு சொந்தமான சர்க்கரை ஆலையாகும்.

பா.ஜ.க தலைவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் நடத்தும் 5 சர்க்கரை ஆலைக்கும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் 5 சர்க்கரை ஆலைக்கும் இந்த நிதியுதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தற்போது கொடுக்கப்பட்டு இருக்கும் நிதி சர்க்கரை ஆலை பராமரிப்பு மற்றும் சம்பளம் கொடுக்க பயன்படுத்தப்படும் என்று சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து நடத்த பராமரிப்பு மிகவும் அவசியம் என்றும், கரும்பு அறுவடைகாலம் போக எஞ்சிய காலத்தில் மில் ஓடாமல் இருக்கும். அதனால் பராமரிப்பு அவசியமாக இருக்கிறது. சர்க்கரை ஆலைகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்னையில் இருந்து வெளியில் வர சர்க்கரை விலையை அதிகரிப்பது ஒன்றுதான் தீர்வாக இருக்கும் என்று மற்றொரு சர்க்கரை ஆலை நிர்வாகி தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை ஒரு டன் 3450 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் சர்க்கரை விலை அதிகரிக்கப்படவில்லை. இதனால் சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்பு கொள்முதலில் 600 ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது கொடுக்கப்பட்டு இருக்கும் கடனை சர்க்கரை ஆலைகள் 8 ஆண்டில் திரும்ப கொடுக்கவேண்டும்.

அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பா.ஜ.க தலைவர்கள் நடத்தும் சர்க்கரை ஆலைகளுக்கு மாநில அரசு ரூ.549 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருந்தது. இதே போன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.631 நிதியுதவி வழங்கப்பட்டது. மேற்கு மகாராஷ்டிராவில்தான் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் இருக்கிறது. அங்கு தேசியவாத காங்கிரஸ் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88