பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாளை முதல் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் இருப்போம். இடைத்தேர்தல் என்றாலே, அதில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகம் இருக்கும். இந்தியாவில் 90 சதவிகிதம் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சினர் தான் வெற்றிபெறுகிறார்கள். காரணம், ஒவ்வொரு தெருவுக்கும் ஓர் அமைச்சர் போடுவார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இப்போதே 9 அமைச்சர்கள் அங்கு இருக்கிறார்கள். இலவசங்கள் இப்போதே வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வேட்டி சேலைகளை பிடித்திருக்கிறார்கள்.
தி.மு.க சார்ந்த நபர்களின் வண்டிகளில் இருந்து அவற்றை பிடித்திருக்கிறார்கள். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மறுபடியும் தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான இலக்கணமாக இருக்கிறது. அதையும் தாண்டி இந்தமுறை எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். கடந்தமுறையும் இந்த தொகுதியில் அவர் போட்டியிட்டார். அவர் வெற்றிக்காக பா.ஜ.க தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். அதனால், அவர் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒரு தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிகொண்ட கட்சி இந்த தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள், இவர்களுக்கு போடாதீர்கள் என்று சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்வதை பார்க்கிறோம்.
ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் நின்றால், மூன்றாவது, நான்காவது இடத்தில் தான் வருவார்கள் என்பதால் நிற்கவில்லை. ஆனால், நாங்கள் முதல் இடத்தில் வரக்கூடாது என்பதற்காக அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். ஏ டீம் என்கிற தி.மு.க ஜெயிப்பதற்காக பி டீம் என்கிற அ.தி.மு.க தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிகொண்டது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மற்றுமொரு முறை அது நிரூபணமாகிறது. கள்ளச்சாராய மரண விவகாரம் கண்டிப்பாக இடைத்தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். மக்கள் அந்த சம்பவத்தை மனதில் வைத்திருக்கிறார்கள். இது சாதாரண சம்பவம் இல்லை. கள்ளச்சாராய கொலை என்றே சொல்ல வேண்டும். ஒருபக்கம் டாஸ்மாக் மூலம் மது விற்பனை, மறுபுறம் மலிவுவிலையில் கள்ளச்சாராயம் என்று ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் மது விற்பனை நடக்கும்போது, அரசில் செயலற்ற தன்மைதான் வெளிப்படுகிறது. அதை மக்கள் கவனிக்கிறார்கள். அதனால், தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். ஒரு எம்.எல்.ஏ வருவதால் நாங்கள் ஆட்சியைப் பிடிக்க போவதில்லை. ஆனால், அரசுக்கு அதுவொரு எச்சரிக்கை செய்தியாக மாறும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளச்சாராய மரண சம்பவம் காரணமாக பா.ம.க வேட்பாளரை மக்கள் வெல்ல வைத்திருக்கிறார்கள் என்ற அச்ச உணர்வை தி.மு.க அரசுக்கு எற்படுத்த முடியும்.
நீட் தேர்வை பொறுத்தவரை, நடிகர் விஜய் ஓர் அரசியல் கட்சி தலைவர் என்ற வகையில் அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். எங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ம.க-வுக்கும் நீட்டைப் பற்றி மாற்றுக்கருத்து இருக்கிறது. அது கருத்து சுதந்திரம். ஆனால், நீட்டுக்கான ஆதரவை இன்னும் வலுவாக பா.ஜ.க கட்சி முன்னெடுக்கிறது. காரணம், அதுசம்பந்தமான பாஸிட்டிவான புள்ளிவிபரங்கள் தான். இந்திய அளவில் அதிக மார்க் வாங்குபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மாநில அரசின் கல்விக்கொள்கையை மக்கள் இன்னும் தீர்க்கமாக பார்க்க வேண்டும். மத்திய அரசின் கல்விக்கொள்கையை அப்படி காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணிவிட்டு, அரசியலுக்காக தி.மு.க-வினர் மத்திய அரசை குறை சொல்கிறார்கள். அரசியலில் படிக்காதவர்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு ஜெயக்குமார் நல்ல உதாரணம். வெள்ளை வேட்டிக் கட்டிக்கொண்டு, அவர் நாமம் வாழ்க, இவர் நாமம் வாழ்க என்று பலர் தமிழக அரசியலில் சுற்றிக்கொண்டு வருகிறார்கள். அவர்களால் தான் தமிழக அரசியலில் பீடை பிடித்திருக்கிறது.
1980, 90 களில் தலைவர்களுக்காக மக்கள் போட்ட ஓட்டை வாங்கி இன்னும் உயிரோடு இருக்கிறது அ.தி.மு.க கட்சி. அந்த கட்சியின் அழிவுக்கு பலபேர் காரணம் என்றாலும், அதில் ஜெயக்குமார் முதல் காரணம். சொந்த ஊர்…அமைச்சராக இருந்தார்..தென் சென்னை தனது கோட்டை என்றார். ஆனால், தென்சென்னை தொகுதியில் அவரது மகன் டெபாசிட் இழந்துள்ளார். அவரெல்லாம் பேசலாமா?. அதனால், அவரது பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு பொலிட்டிசியன் அப்டேட்டடாக இருக்க வேண்டும் என இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எந்த அப்டேட்டையும் தெரிந்துகொள்ளாமல் காலையிலும், மாலையிலும் தனது வீட்டில் லுங்கியைக் கட்டிக்கொண்டு பிரஸ்மீட் வைக்கிறார். இந்த இரண்டையும் வைத்தால் கட்சி வளர்ந்துவிடுமா?. என்னை பா.ஜ.க கட்சியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் துடிக்கிறார்கள். அதனால், அவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், நான் எங்கேயும் போகபோவதில்லை. இங்கேதான் இருக்கப் போகிறேன். ஜெயக்குமார் அண்ணா எவ்வளவு சாமியை வேண்டுமானாலும் கும்பிடட்டும். அதேநேரம், இந்த அண்ணாமலை பா.ஜ.க-வில் லட்சத்தில் ஒருவர்தான். நான் கட்சியை விட்டுப் போனால், அடுத்து ராமசாமியோ, குப்புசாமியோ, சுந்தரோ இந்த பதவிக்கு வந்து என்னைவிட இன்னும் பத்து மடங்கு சிறப்பாக செயல்பட போகிறார். அல்லது மாலினியோ, நளினியோ வரலாம். அதனால், எத்தனை பிரஸ்மீட் கொடுத்தாலும், அ.தி.மு.க அழிந்துகொண்டிருக்கிறது என்பது தொண்டர்களுக்கு தெரியும். முனுசாமியும், ஜெயக்குமாரும் ஒரு பிரஸ்மீட் மூலம் பேசினால், இந்தப் பக்கம் பா.ஜ.க-வுக்கு வாக்கு வங்கி ஒரு சதவிகிதம் அதிகரிக்கும்.
செங்கோலை கேவலமாக பேசிய சு.வெங்கடேசன் மதுரை மேயருக்கு பழனிவேல் தியாகராஜனோடு சேர்ந்து செங்கோலை கொடுத்திருக்கிறார். அதற்கு நான் விமர்சனம் செய்துள்ளேன். அவர் எழுதும் கதைகளில் காலம் தான் கதாநாயகன். அந்தக் காலம் கம்னியூஸ்ட் கட்சியை உருட்டி உருட்டி கொண்டுவந்து தற்போது கட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. பாண்டிச்சேரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி, நான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் வித்ததாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார். வரும் செவ்வாய் கிழமை அவர்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடுக்க இருக்கிறேன். அடுத்து, ‘நாய்கூட பி.ஏ வாங்கலாம்’ என்று பேசியுள்ளார். ஆனால், உதயநிதி போல் கல்லூரி செல்லாமலேயே பட்டம் வாங்கியதை அவர் பெருமையாக சொல்கிறார் போல.
ஒருகாலத்தில் மேயர் என்றால் எவ்வளவு மரியாதை. கோவை மேயர் வார்டில் 300 ஓட்டுகள் பா.ஜ.க அதிகம் வாங்கியதால், அவரை தூக்கியிருக்கிறார்கள். தி.மு.க கட்சியே சரியில்லாதபோது, மேயர்கள் சரியில்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அதனால், எல்லா மேயர்களையும் நீக்கினால் நல்லது. மக்கள் மேயர்களின் தொல்லை இல்லாமல் கார்ப்பரேஷன் அலுவலகங்களுக்கு சென்று கரப்ஷன் இல்லாமல் வேலைகளை முடித்துக்கொண்டு வருவார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88