Warren Buffett: வாரன் பஃபெட் மாற்றி எழுதிய உயில்… தானமாக எவ்வளவு கொடுக்கிறார் தெரியுமா..?

பங்குச் சந்தையின் தந்தை என்று போற்றப்படும் வாரன் பஃபெட் தமது சொத்துகள் குறித்தான உயில் விவரங்களை தற்போது மாற்றி அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோருடன் இணைந்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்  என்ற அறக்கட்டளையை தொடங்கி தன்னிடம் உள்ள சொத்துகளில் இருந்து பெரும் பகுதியை தானமாக அந்த அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.

அந்த அறக்கட்டளையின் மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் ஏழ்மை ஒழிப்பு உள்பட்ட பல்வேறு உதவிகளை உலகில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கி வருகிறார். அவருக்கு ஹோவர்ட், சூசன் மற்றும் பீட்டர் என்று மூன்று வாரிசுகள் உள்ளனர். அந்த மூன்று வாரிசுகளும் தங்களது தலைமையில் அறக்கட்டளைகளை நிறுவி அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.

பில் கேட்ஸ், வாரன் பஃபெட்

இத்துடன் வாரன் பஃபெட்-ன் மறைந்த மனைவி சூசன் தாம்சன் பெயரிலும் ஓர் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக எழுதப்பட்ட உயிலில் அவரது சொத்துகள் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் அவரது குடும்பம் சார்ந்த நான்கு அறக்கட்டளைகளுக்கு செல்லுமாறு எழுதப்பட்டிருந்தது. தற்போது வாரன் பஃபெட் தமது உயிலை மாற்றி எழுதி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவரது சொத்துகள் அனைத்தும் அவரது காலத்திற்குப் பிறகு அவரது குடும்பம் சார்ந்த நான்கு அறக்கட்டளைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் மெலிண்டா அண்ட் பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு எந்தச் சொத்துகளும் வழங்கப்படாது என்றும் மாற்றி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது மூன்று பிள்ளைகளும் சிறப்பான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களின் மேல் கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே தற்போது இந்த மாற்றத்தை தமது உயிலில் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்வு காலத்தில் ஈட்டும் வருமானத்தில் தொடர்ந்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு பகுதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தற்போது அவர் தலைவராக இருக்கும் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின்  கிளாஸ் ஏ பங்குகளில் 9,000 பங்குகளை அந்த நிறுவனத்தின் கிளாஸ் பி பங்குகளாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தானமாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரன் பஃபெட் (Warren Buffett )

அந்த நிறுவனத்தின் கிளாஸ் ஏ பங்கு தான் உலகிலேயே மிக மதிப்பு கொண்ட பங்காக திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் ஒரு கிளாஸ் ஏ பங்கின் விலை தற்போதைய நிலவரத்தின்படி 6,13,000 அமெரிக்க டாலர் ஆகும். இது இந்திய மதிப்பில் 5.08 கோடி ரூபாயாகும். அந்த நிறுவனத்தின் ஒரு கிளாஸ் பி பங்கின் விலை தற்போதைய நிலவரத்தின்படி 407 அமெரிக்க டாலர் ஆகும். தற்போது 9000 கிளாஸ் ஏ பங்குகள் 13 மில்லியன் கிளாஸ் பி பங்குகளாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட 13 மில்லியன் கிளாஸ் பி பங்குகளில் 9.3 மில்லியன் பங்குகள் கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கேட்ஸ் அறக்கட்டளைக்கு தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகிறார். தற்போது வழங்கப்பட்ட தொகையையும் சேர்த்து இதுவரை 43 பில்லியன் டாலர்களை அந்த அறக்கட்டளைக்கு வழங்கி இருக்கிறார். இந்த அறக்கட்டளையின் தலைவராக இருந்த பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா  தற்போது அந்த அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்து ஜூன் 7 முதல் விலகுவதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்கப்பட்ட நன்கொடைக்கு பிறகு  வாரனிடம்  பெர்க்ஷயர் நிறுவனத்தின் 207,963 கிளாஸ் ஏ பங்குகள் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு 128 பில்லியன் டாலர் ஆகும்.