$1 billion Fraud: இந்திய-அமெரிக்க தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு 90 மாதங்கள் சிறைத் தண்டனை – பின்னணி என்ன?

தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் தொழில்முனைவராக அறியப்படுபவர்தான் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் ரிஷி ஷா. மருத்துவரின் மகனான ரிஷி ஷா, 2005-ம் ஆண்டு நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் படித்தார். 2006-ல், ரிஷி ஷா அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தை நிறுவினார். இது நோயாளிகளை இலக்காகக் கொண்டு, மருத்துமனைகள், மருத்துவர்களின் அறைகளில், சுகாதார விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான நிறுவனமாக செயல்பட்டது.

ரிஷி ஷா

பெருவாரியான மருத்துவ நிறுவனங்களின் ஆதரவைப் பெற்று, கணிசமாக வளர்ந்தது. 2010-ம் ஆண்டுகளில் தொழில்நுட்ப மற்றும் சுகாதார முதலீட்டு சமூகங்களில் ஒரு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. 2011-ல் ஜம்ப்ஸ்டார்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார். ரிஷி ஷாவின் நிகர சொத்து மதிப்பு 2016-ல் $4 பில்லியன் டாலருக்கும் அதிகம். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் மோசடி நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியது.

கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஆல்பாபெட் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு தொடர்ந்தனர். அவுட்கம் ஹெல்த்தின் இணை நிறுவனரான ரிஷி ஷா, 12-க்கும் மேற்பட்ட மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார். ஏப்ரல் 2023-ல், அவரது நிறுவனத்தின் இணை நிறுவனர்களான, பிராட் பர்டி, ஷ்ரதா அகர்வால் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

ரிஷி ஷா

இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், விளம்பர ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் ரூ.8,300 கோடி (1 பில்லியன் டாலர்) மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஷ்ரதா அகர்வாலுக்கு மூன்றாண்டுகளும், பிராட் பர்டிக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ரிஷி ஷாவுக்கு 90 மாதங்கள் (ஏழறை ஆண்டுகள்) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.