Modi: `எங்களுக்கு எதிராக பொய்களை பரப்ப முயன்று தோற்றனர்; எதிர்க்கட்சிகளின் வேதனை புரிகிறது!’ – மோடி

மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்று, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கையிலெடுத்து, ஆளும் அரசுக்கு எதிராகப் பேசி வருகின்றன. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை நிகழ்த்தினர்.

ராகுல் காந்தி – மோடி

அதில், மணிப்பூர் விவகாரம், நீட் முறைகேடு விவகாரம், தேர்தல் பத்திர விவகாரம், ரயில் விபத்து விவகாரங்கள், எதிர்க்கட்சிகள் மீது விசாரணை ஏஜென்சிகள் மூலம் நடவடிக்கை எடுத்தது, அதானி, அம்பானி தொடர்பான குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுகள், பா.ஜ.க தலைவர்கள் வெறுப்பைப் பரப்புவது தொடர்பாக சர்ச்சைகள், அரசியல் சாசனம் மீதான தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள்,

எதிர்க்கட்சிகளை முடக்கும் நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள், பா.ஜ.க அரசின் திட்டங்கள்மீதான விமர்சனங்கள் எனப் பல்வேறு கேள்விகளை காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எழுப்பியிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க நான் இங்கு வந்துள்ளேன்.

பிரதமர் மோடி

நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் விக்சித் பாரதத் குறித்த எங்களின் தீர்மானத்தை விவரித்தார். குடியரசுத் தலைவர் முக்கியமான பிரச்னைகளை எழுப்பி, எங்களுக்கும் நாட்டிற்கும் வழிகாட்டியிருக்கிறார். நேற்றும் இன்றும் பல எம்.பி-க்கள் குடியரசுத் தலைவர் உரை குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றி, அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினரைப்போல செயல்பட்டார்கள்.

அவர்கள் சபையின் கண்ணியத்தை உயர்த்தி, இந்த விவாதத்தை தங்கள் கருத்துகளால் மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்கியுள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்களில் எனது கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை பாராட்டுகிறேன். எங்களுக்கு எதிராக பொய்களை பரப்புவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும், தோற்கடிக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சியினர் சிலரின் வேதனை எனக்கு புரிகிறது. மக்கள் எங்களை மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுத்தது பெருமைக்குரியது. நாடு நீண்ட காலமாக சமாதான அரசியலைப் பார்த்தது. ஆனால் நாங்கள் பின்பற்றியது யாருடனும் சமரசமில்லாமல் அனைவருக்கும் நீதி” எனக் குறிப்பிட்டார்.