“பொய்சொல்வது பயன்தராது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்?” – கமலா ஹாரிஸை விமர்சித்த எலான் மஸ்க்!

எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள நிறுவனம் 2022-ம் ஆண்டு ‘Community Notes’ (சமூகக் குறிப்புகள்) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மக்களை தவறாக வழிநடத்தும் பொய்த் தகவல் பதிவுகளைக் அடையாளம் கண்டு, அதற்கான உண்மையான செய்திகளை தொகுத்து வழங்கும். தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஜோ பைடன் – கமலா ஹாரிஸ்

அதைத் தொடர்ந்து, எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க், “Community Notes எனும் இந்த அம்சம் தவறான தகவலை நீக்கி, உண்மைகளைக் கண்டறிய உதவும். அதன் மூலம் சிறந்த அணுகுமுறையை முன்னெடுக்க முடியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சி, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் தேர்தல் பிரசாரம் தீவிரமாகி வருகிறது.

சமீபத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும், தற்போதைய அதிபர் ஜோ பைடனும் நேருக்கு நேர் நின்று விவாதித்துக்கொண்டது உலகளவில் வைரலானது. இந்த நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், எக்ஸ் பக்கத்தில்,“டொனால்ட் டிரம்ப், ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடை விதிப்பார். இந்த விவகாரத்தில் ஜோ பைடனும் நானும் அவரைத் தடுத்து, பெண்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கமலா ஹாரிஸ் பதிவுக்கு கீழே Community Notes அம்சம், அந்தத் தகவலை உண்மைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. அதில், டொனால்ட் டிரம்பின் முந்தைய அறிக்கைகளுக்கான செய்தி இணைப்புகளை ஒருங்கிணைத்து, “ட்ரம்ப் நாடு தழுவிய கருக்கலைப்பு தடைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். அந்த முடிவை மாநிலங்களுக்கு விட்டுவிட்டார்.” என்ற செய்தியை வழங்கியது. இதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த எலான் மஸ்க்,“அரசியல்வாதிகள் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் கணக்கை இயக்கும் உதவியாளர்கள் இனி இந்த தளத்தில் பொய் சொல்வது பயன்தராது என்பதை எப்போது கற்றுக்கொள்வார்கள்?” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88