இந்தியாவில் ஏற்கெனவே இருந்த குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, கடந்த ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்களை பாஜக அரசு கொண்டுவந்தது. எதிர்க்கட்சிகள் இதில் நிறைய குறைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தின. இருப்பினும், பல தசாப்தங்களாக நடைமுறையில் ஆங்கிலேயர் காலனித்துவ சட்டங்களுக்குப் பதிலாக இந்திய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது என பா.ஜ.க கூறிவந்தது.
இத்தகைய சூழலில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய குற்றவியல் சட்டங்களில் இருக்கும் சில மாற்றங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து, ப.சிதம்பரம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இந்திய குற்றவியல் சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று அமலுக்கு வருகின்றன. புதிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றில் 90 – 99 சதவிகிதம் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து அப்படியே கொண்டுவரப்பட்டவைதான். ஏற்கெனவே, அமலிலிருந்த சட்டங்களில் சில உரிய திருத்தங்களை மேற்கொண்டு அமல்படுத்தியிருக்க வேண்டியதைப் புதிதாக மூன்று சட்டங்களாக மாற்றி வீண் வேலை செய்திருக்கிறது மத்திய அரசு.
புதிய சட்டங்களில் சில முன்னேற்றங்கள் இருக்கின்றன, அவற்றை வரவேற்கிறோம். இருப்பினும், அவற்றைத் திருத்தங்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். அதேசமயம், இதில் கொண்டுவப்பாட்டிற்கும் சில மாற்றங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை . நிலைக்குழுவின் உறுப்பினர்களாக இருந்த எம்.பி.க்கள், இது குறித்து விரிவான கருத்து வேறுபாடு குறிப்புகளை எழுதியுள்ளனர். அரசு இதை மறுக்கவுமில்லை, பதிலளிக்கவுமில்லை.
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. சட்ட அறிஞர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், நீதிபதிகள், புதிய சட்டங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். ஆனால், அதற்குப் பதிலளிக்க அரசாங்கத்தில் யாரும் அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே உள்ள மூன்று சட்டங்களை புல்டோசர் செய்து, போதுமான விவாதம் எதுவும் இல்லாமல் மூன்று புதிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது.
இதன் முதல் தாக்கம், குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அடுத்து, பல்வேறு நீதிமன்றங்களில் புதிய சட்டங்களலால் பல சவால்கள் ஏற்படக்கூடும். காலப்போக்கில், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித் துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88