Rahul Vs Modi: `அயோத்தி முதல் நீட் வரை… மோடியின் அறியாமை?!’ – நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அப்போதே அது அரசியல் அரங்கில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்தே பா.ஜ.க கட்சியாக பெரும்பான்மையை இழந்து, என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், 18-வது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தின் 6-வது நாளான இன்று, `ஜெய் சம்விதான் (அரசியலமைப்புச் சட்டம்)’ எனக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன் முதல் உரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி.

அப்போது,“பா.ஜ.க-வின் கடந்த ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் உத்தரவால் என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. எனது வீடு பறிக்கப்பட்டது. ஊடகங்களில் இடைவிடாத தாக்குதல். 55 மணிநேரம் விசாரணை எனக் கடுமையாக தாக்கப்பட்டேன். இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ஏனென்றால் எங்களுக்கு அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது, அது உண்மை.

மகாத்மா காந்திப் பற்றிய திரைப்படம் மட்டும் வராமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியை யாருக்கும் தெரிந்திருக்காது எனப் பேசினார் பிரதமர் மோடி. அவருடைய அறியாமையை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

இந்தியா என்ற தேசத்தின் மீதும், பா.ஜ.க-வின் திட்டங்களை எதிர்த்தவர்கள் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை எதிர்த்த மக்கள் மீதும் திட்டமிட்ட மற்றும் முழு அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டனர். ஏழைகள், தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை எதிர்த்த தலைவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். அரசியல் சாசனம் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், எங்களால் யாரும் தாக்கப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ராகுல் காந்தி

ஏனென்றால் இது அகிம்சை தேசம். யாருக்கும் பயப்படுவதில்லை. (சிவனின் படத்தைக் காண்பித்த ராகுல் காந்தி) சிவன் காண்பிப்பது அபயமுத்ரா. இதுதான் காங்கிரஸின் சின்னம்…

அபயமுத்ரா என்பது அச்சமின்மை, உறுதி, பாதுகாப்பின் சைகை, இது பயத்தை நீக்கி, இந்து, இஸ்லாம், சீக்கியம், பௌத்தம் உள்ளிட்ட பிற இந்திய மதங்களின் தெய்வீக பாதுகாப்பையும் பேரின்பத்தையும் அளிக்கிறது. நம் நாட்டின் பெரிய மனிதர்கள் அகிம்சையால் பயத்தைப் போக்கியிருக்கிறார்கள்… ஆனால், தங்களை இந்து என்று அடையாளப்படுத்துக்கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, அசத்தியம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

இந்து மதம் என்பது பயம், வெறுப்பு மற்றும் பொய்களைப் பரப்புவதல்ல.” எனக் கூறினார்.

அப்போது எழுந்து குறுக்கிட்ட பிரதமர் மோடி, “இது முழுக்க முழுக்க இந்து சமூகத்தின் மீதான தாக்குதல்…” எனக் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,`1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை குறிப்பிட்டு, “அகிம்சை பற்றி பேச ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் இந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள், அவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறாரா? தனது கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அமித் ஷா – ராஜ்நாத் சிங்- மோடி

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி,“பா.ஜ.க-வும், அதன் பிற அமைப்புகளும், பிரதமர் மோடியும் முழு இந்து சமுதாயத்தின் பிரதிநிதிகளல்ல என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்துகிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உள்ளூர் மக்களின் வீடுகள், கடைகளை அரசு இடித்தது. ஆனால், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அயோத்தி மக்களுக்கே அழைப்பு விடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் அவர் மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, தொடர்ந்து பேசுகையில்,“அவையில் `அயோத்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், எனது மைக் மீண்டும் முடக்கப்பட்டது.

கடந்த முறை பா.ஜ.க அரசு கொண்டு வந்த `அக்னிவீர்’ திட்டத்தில் பங்குபெறும் வீரர்கள் முழுமையாக ராணுவப் பயிற்சி பெறாதவர்கள். அவர்களால் நீண்ட காலம் பயிற்சி பெற்ற சீன ராணுவ வீரர்களை எதிர்கொள்ள முடியாது.

ராகுல் காந்தி

மேலும், அவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாது. ஒரு அக்னிவீரர் கண்ணிவெடி வெடிப்பில் தனது உயிரை இழந்தார், ஆனால் அவர் ‘தியாகி’ என்று அழைக்கப்படவில்லை. அக்னிவீரர்கள் யூஸ் அன்ட் த்ரோ போல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

அப்போது குறிக்கிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ராகுல் காந்தி கூறுவது அப்பட்டமான பொய். அக்னிவீரர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும், ராணுவ வீரர்களுக்கு எதிரான திட்டமாக அக்னிவீர் திட்டத்தை நாங்கள் கருதுவதால், இந்த திட்டத்தை ரத்து செய்வோம்.

பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து எதுவும் பேசுவதுமில்லை, ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. அங்கு எந்தப் பிரச்னையும் நடக்காததுபோலும், அந்த மாநிலம் இந்தியாவுக்கு வெளியே இருப்பதுபோலும் அரசு நடந்து கொள்கிறது. பா.ஜ.க-வின் அரசியல், கொள்கைகள் மணிப்பூரை எரித்துவிட்டன. அதனால் மணிப்பூர் உள்நாட்டுப் போரில் சிக்கி தவிக்கிறது.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு பா.ஜ.க-வின் கொள்கைகளே காரணம்.

பிரதமர் மோடி

பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் வேலை வாய்ப்பு உருவாக்கத்தின் முதுகெலும்பை அரசு உடைத்துவிட்டது.

வரும் தேர்தலில் குஜராத்தில் பா.ஜ.க அரசை காங்கிரஸ் தோற்கடிக்கும். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி)யை சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் கேட்கிறார்கள். ஆனால் பா.ஜ.க அரசு அதை வழங்கத் தயாராக இல்லை.

தொழில்முறை தேர்வான நீட் தேர்வை பா.ஜ.க வணிகத் தேர்வாக மாற்றியுள்ளது. முழுத் தேர்வு முறையும் பணக்காரக் குழந்தைகளுக்கான வணிக அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இன்று நீட் தேர்வை மாணவர்கள் நம்பவில்லை.

அது பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மாணவர்கள் கருதுகிறார்கள்.

நான் காங்கிரஸ் கட்சியை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அனைத்து எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய அமைப்புகளின் அடக்குமுறை என்னையும் பாதித்தது.

இந்த அவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, ​​பிரதமர் மோடியுடன் கைகுலுக்கும்போது, குனிந்து பணிவாக கைகுலுக்கினார்” எனக் குறிப்பிட்டார்.

சபாநாயகர் ஓம்.பிர்லா

இதற்குப் பதிலளித்த ஓம்.பிர்லா, “பெரியவர்கள் முன் தலைவணங்குவது நமது கலாசாரத்தின் ஒரு அங்கம்” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தான் உயரிய பதவி வகிப்பவர் என்பதை நினைவுபடுத்துகிறேன். சிவனின் கொள்கைகளை நீங்கள் பின்பற்றும் வரை, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசின் எதிரி அல்ல. எதிர்க்கட்சிகள் அரசுக்கு உதவவே முயல்கின்றன.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88