சாலையில் செல்லும்போது மனநலம் பாதிக்கப்பட்டு உணவில்லாமலும், அழுக்குப் படிந்த உடையுடன் சுற்றித்திரியும் பலரைப் பார்த்திருப்போம். தான் யாரென்றே தெரியாத இவர்களைத் தாய், தந்தை, மனைவி, சகோதரர் என யாராவது ஒருவர் எங்கேயாவது தேடிக் கொண்டேதான் இருப்பார்கள். அதுபோன்றே வீட்டை விட்டு வெளியேறிய மகன் இறந்துவிட்டதாக ஆந்திரத்தைச் சேர்ந்த பெற்றோர் எண்ணிக் கொண்டிருக்க, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அந்த இளைஞர் மீட்கப்பட்டு மீண்டும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த இளைஞரை மீட்டு மனநல சிகிச்சை அளித்துப் பெற்றோரிடம் சேர்த்து வைத்த ஈரோட்டைச் சேர்ந்த அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நவீன்குமார் நம்மிடம் பேசுகையில், “பெருந்துறை அருகே பேருந்து நிறுத்தத்தில் அழுக்கு உடையுடன் உணவில்லாமல் நீண்ட நாள்களாக ஒருவர் படுத்துக் கிடப்பதாக எங்களுக்குப் பிப்ரவரி மாதம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு எங்கள் குழுவினர் சென்று அவரிடம் பேச முயற்சித்தோம். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மிகுந்த கோபத்துடனும் ஆக்ரோஷமாகவும் நடந்து கொண்டார். அவர் தனது அருகில் ஒரு நாயைக் கயிறு மூலம் கட்டி வைத்திருந்தார். இதனால், அவரிடம் எங்களால் நெருங்க முடியவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/ea5fcd78-13f6-49a4-8404-26819feb7139/WhatsApp_Image_2024_07_01_at_09_49_02.jpeg)
அவரைத் தொடர்ச்சியாகக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். மீண்டும் இரண்டாம் முறை பேச முயன்றபோது, தனக்கு எங்கும் வரப் பிடிக்கவில்லை என்று தெலுங்கில் பேசினார். இதைத் தொடர்ந்து அவரிடம் பேசி பேசி ஒருவழியாக அவரை அங்கிருந்து மீட்டு, அட்சயம் அறக்கட்டளையின்கீழ் இயங்கி வரும் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் அனுமதித்தோம்.
அங்கு அவருக்கு மூன்று மாதங்களுக்கு மேல் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அவரைக் குறித்த தகவல்களை அவரிடமே கேட்டோம். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசிய அவரது பெயர் சையத் மொய்ஃப் என்றும் ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருக்குத் தந்தை சையது மைதீன், தாய், இரண்டு சகோதரிகள் உள்ளதாகவும், பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு, ஜம்மி குண்டா பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
தனது சகோதரியின் திருமணம் தொடர்பாகப் பண பிரச்னையில் சொந்த வீட்டை விற்றுள்ளனர். தொடர்ந்து, வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சரியான வேலை இல்லாததால் வீட்டு வாடகையும் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் பண இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார் சையத் மொய்ஃப். இதனால், மன அழுத்தம் அதிகமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறிது பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஹைதராபாத்திலிருந்து கோவைக்கு வரும் ரயில் ஏறி வந்துள்ளார். ரயில் பயணத்தின்போதே பணத்தையும், உடைமைகளையும் பறிகொடுத்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/98cb8fc8-1194-45da-b9d0-d4eb0dcb6f25/WhatsApp_Image_2024_07_01_at_09_49_24.jpeg)
கோவையில் இறங்கியவருக்கு மொழி தெரியாததால், என்ன செய்வதென்று தெரியாமல் ஒன்றரை வருட காலமாக ஒரே ஒரு ஆடையை அணிந்து கொண்டு சுற்றியுள்ளார். சரியாக உணவில்லாமலும், தங்குவதற்கு இடம் இல்லாமல் சாலையில் செல்பவர்கள் தரும் உணவை உண்டு வாழ்ந்துள்ளார். கொரோனா பொது முடக்கம் காரணமாகப் பல நாள்கள் உண்ண உணவில்லாமல் இருந்துள்ளார்.
உதவி கேட்டுச் செல்லும்போது, சிலர் இவரை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தி உள்ளனர். அதனால் தமிழில் பேசினாலே மனதுக்குள் ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவையிலிருந்து நடந்து பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு இருந்த பேருந்து நிறுத்தத்தில் தங்கியுள்ளார். அங்கிருந்த வடமாநிலத்தவர்கள் உடையையும், உணவும் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து உடையை மாற்றியுள்ளார் சையத் மொய்ஃப்.
சையத் மொய்ஃப்பிடம் அவரது தந்தை சையது மைதீன் கைப்பேசி எண்ணைப் பெற்றுத் தொடர்புகொண்டோம். கொரேனா காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி மகனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவன் இறந்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருந்தோம், மகன் உயிருடன் இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர். பின்னர் ஆந்திரத்திலிருந்து ஈரோட்டுக்கு அவர்கள் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/8dc08b6a-14d3-4d94-9fb4-32243e2ecd12/WhatsApp Image 2024-07-01 at 13.14.35.jpeg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/cad677cb-2600-4ccd-92f6-71a91894c6e3/WhatsApp_Image_2024_07_01_at_09_48_57__1_.jpeg)
இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த மகனை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உயிரோடு பார்த்ததும் சையது மொய்ஃப்பின் தந்தையும், தாயும் அவரை ஆரத்தழுவி அழுததைப் பார்த்தது நாங்களும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம். தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் முன்னிலையில் சையத் மொய்ஃப் ஒப்படைக்கப்பட்டார்” என்றார்.