நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக, ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த 2022 ஏப்ரல் முதல் பொறுப்பு விகித்து வந்த நிலையில், அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி, நாட்டின் 30-வது ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இன்று (ஜீன் 30, 2024) அவர் பதவியேற்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் கவனித்துள்ளார். ஜூலை 1, 1964 -ல் பிறந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, டிசம்பர் 15, 1984 அன்று இந்திய ராணுவத்தின் ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் ஆர் ஹரி குமார் ஏப்ரல் 30, 2024 அன்று பணி நிறைவு பெற்றதையடுத்து, கடற்படை துணைத் தளபதியாக பணியாற்றி வந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி கடந்த 2024 ஏப்ரல் 30 முதல் கடற்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 1985 ஜூலை 01 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான இவர், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளார். வினாஷ், கிர்ச், திரிசூல் ஆகிய இந்திய கடற்படை கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் டி.கே.திரிபாதி பணியாற்றியுள்ளார்.
நாட்டின் உட்சபட்ச அதிகாரமிக்க உயர் பதவியில் இருக்கும் இவர்கள் இருவரும் யார் என்று தெரியுமா?
இவர்கள் இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்திய ராணுவத் தளபதியாக இன்று (ஜூன் 30, 2024) பொறுப்பேற்கவுள்ள லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியும், கடற்படைத் தளபதியான அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பள்ளி பருவத் தோழர்கள் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் இவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். 1970-களில் இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பில் ஒருசேர பயின்றுள்ளனர் என்ற தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஏ.பரத் பூஷண் பாபு எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பள்ளி படிக்கும்போது லெப்டினன்ட் ஜெனரல் திவேதியின் வரிசை எண் 931 ஆகவும், அட்மிரல் திரிபாதியின் வரிசை எண் 938 ஆகவும் இருந்ததாகவும், இரண்டு அதிகாரிகளின் வரிசை எண்களும் ஒன்றன்பின் ஒன்றாக இருந்ததாகவும், பள்ளியில் படிக்கும் போது ஆரம்ப காலத்திலிருந்தே அவர்களது நட்பு பிணைப்பு வலுவாக இருந்ததாகவும், இது போன்று மூத்த தலைவர்களுக்கு இடையே வலுவான நட்புறவு இருப்பதனால், இரு படைகளுக்குமிடையேயான புரிதல் மற்றும் உறவு பலப்படும் என்று சொல்லப்படுகிறது.
இவ்விரண்டு தளபதிகளின் பணி நியமனங்களும், ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளியில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப்படிப்பை முடித்த பின்பும், இவர்கள் இருவருக்குமிடையே இருந்துவந்த நட்பு தொடர்ந்ததாகவும், தத்தம் பணியில் ஏற்படும் இடையூறுகள், சிக்கல்களை இவர்கள் இருவரும் பறிமாறிக் கொள்வதோடு பரஸ்பர நட்புறவை பேணி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய முப்படைகளின் உயர் பதவிகளில் பொறுப்பேற்றுள்ள இருவரும், பள்ளிப்பருவத் தோழர்கள் என்பதாலும், இருவரும் தற்போது கடற்படை, ராணுவ தளபதிகளாக மாறியிருப்பதன்மூலமும், இவ்விரு படைகளிடையே உறவை வலுப்படுத்த பேருதவியாக அமையுமென்றும்,
இவர்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை எளிதில் சரிசெய்ய இயலும் என்றும், இதன் மூலம் இந்தியாவின் ராணுவ மற்றும் கடற்படை கட்டமைப்பை மேம்படுத்தி வலிமை பெறுவதோடு, சிக்கலான நேரங்களில் முடிவுகள் எடுக்கும்போது சிரமம் இருக்காது என்றும் உயரதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.