தைவானைச் சேர்ந்த `ஃபாக்ஸ்கான்’ (Foxconn) நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இங்கு, இந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனைத் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை தரப்படுவதில்லை என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் கள ஆய்வு செய்து விரிவான செய்தி வெளியிட்டது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை சில ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டது. மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், இது குறித்து விளக்கமான அறிக்கையை அளிக்கும்படி தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறையிடம் அறிக்கை கேட்டது.
இந்த செய்தி வலைதளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து விளக்கம் அளித்துள்ளது ஃபாக்ஸ்கான் நிறுவனம். அதில்,
“ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனம், நாட்டிலேயே பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாகும். எங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு திருமணம் ஆனவர்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
அத்துடன், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே உள்ளனர். 30% மட்டுமே ஆண்கள் பணிபுரிகின்றனர். இது உற்பத்தி நிறுவனம் என்பதால், பணியாளர்கள் எந்தவித உலோகங்களையும் அணியக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாகவே ஆலையில் பணியாளர்கள் எந்த அடையாள சின்னங்களையும் அணிய கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்து இந்த தடை விதிக்கப்படவில்லை. பல உற்பத்தி நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளது. நிறுவனத்தில் வேலை கிடைக்க வில்லை என்பதற்காக சிலர் இதுபோன்ற வதந்திகளை கிளப்பி இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளது.