சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு.. என்ன வித்தியாசம், யார் நடத்துவது?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்டதுடன், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இ.பி.சி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்ததது. அதைத் தொடர்ந்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த விவாதம் தேசிய அளவில் எழுந்தது.

நிதிஷ் குமார்

பீகாரைப் போலவே தமிழ்நாட்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை சில அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் பாட்னா உயர் நீதிமன்றத்தில் சமீபத்திய உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, பீகார் அரசு 65 சதவிகிதமாக இடஒதுக்கீட்டை அதிகரித்ததை, பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்துசெய்துவிட்டது.

இந்த நிலையில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும்’ என்ற தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, ‘புள்ளிவிவர சட்டத்தின்படி, மாநில அரசுகள் சமூக பொருளாதார புள்ளிவிவரங்களை சேகரிக்கலாமே தவிர, அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரம் சேகரிக்க இயலாது.

ஸ்டாலின்

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினேன். மத்திய அரசு களப்பணியை மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட்டங்கள் ஆகியவற்றுக்குத்தான் எப்போதும் சட்டரீதியான பாதுகாப்பு இருக்கும்” என்றார் ஸ்டாலின்.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் – 1948-ன் கீழ் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கென்று தனியாக ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் கண்காணிப்பின் கீழ் மத்திய அரசால் மாநிலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பாலச்சந்திரன்

கடைசியாக, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு, 2021-ம் ஆண்டு நடத்தியிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று பரவியதால் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் வேறுபாடு என்ன… இந்த கணக்கெடுப்பகள் யார் நடத்துவது..’ என்ற கேள்விகளை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலச்சந்திரனிடம் முன்வைத்தோம்.

“மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசுகளால் நடத்தப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய திட்டமிடல் இருக்கிற்து. பாலினம், வயது போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமல்லாமல், சாதி, மதம், கல்வி, எழுத்தறிவு உள்பட முழுமையான, விரிவான சமூகப் பொருளாதார பின்னணி விவரங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் அடங்கியிருக்கும்.

ஜெயலலிதா

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும். நீதிமன்றங்களால்கூட அதை எதுவும் செய்ய முடியாது. ஆனால், மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு அந்தளவுக்கு முழுமையானதாக, விரிவானதாக இருக்குமா என்று சொல்ல முடியாது. அதனால்தான், சாதிவாரி கணக்கெடுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கெள்ளாமலும் போகலாம் என்ற நிலை இருக்கிறது. அப்படித்தான், பீகாரில் 65 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்ததை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் 69 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதை அப்போது, மிகவும் சிரமப்பட்டு நாடாளுமன்றம் வரை சென்று, அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்து, அந்த இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கினார்கள். அதனால்தான், பாட்னா உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டைப் போல 9-வது அட்டவணையில் இடஒதுக்கீட்டை சேர்க்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்கள் இப்போது கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சட்டமன்றம் முதல்வர் ஸ்டாலின்

இதுவே மக்கள்தொகை அடிப்படையில் பீகாரில் இடஒதுக்கீட்டை அதிகரித்தனர் என்றால், நீதிமன்றம் அதை ரத்துசெய்திருக்காது. அதனால்தான், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசே நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். அதற்கான தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள்” என்கிறார் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

தமிழகத்தின் குரலுக்கு செவிசாய்த்து மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து மோடி அரசு நடத்துமா? பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய நிதிஷ் குமார் தயவில்தான் மோடி அரசு இருக்கிறது. அந்த அரசை நிதிஷ் குமார் வலியுறுத்துவாரா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88