அதிக சம்பளம் வாங்கும் Top 10 CEOs: சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா லிஸ்டில் இல்லை..!

சமீபத்தில் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் டாப் 10 சிஇஓ பட்டியலை சி சூட் கம்ப் நிறுவனம் வெளியிட்டது. இதில் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் (Palo Alto Networks) நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவராக உள்ள 56 வயதாகும் நிகேஷ் அரோரா இடம்பிடித்துள்ளார். 2023-ம் ஆண்டில் ரூ.2,200 கோடி (266 மில்லியன் டாலர்) ஊதியம் பெற்று பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையும், மைக்ரோசாஃப்டின் சிஇஓ சத்ய நாதெல்லாவும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

சுந்தர் பிச்சை

நிகேஷ் அரோரா, டெல்லியில் உள்ள ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் பள்ளியில் படிப்பை முடித்தார். அதன்பின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், பாஸ்டன் கல்லூரியில் எம்எஸ்சி படிப்பையும் முடித்தார்.

அதன்பின் கூகுளில் இணைந்து 10 ஆண்டுகள் பணியாற்றியவர், 2014-ல் சாஃப்ட் பேங்க் குழுமத்தில் இணைந்தார். 2018-ல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் சிஇஓ ஆனார். 

இந்தப் பட்டியலில் 1.4 பில்லியன் டாலர் (ரூ.11,600 கோடி) ஊதியம் பெற்று எலான் மஸ்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பலந்திர்டெக்னாலஜிஸ் சிஇஓ அலெக்சாண்டர் கார்ப் 1.1 பில்லியன் டாலர் (ரூ.9,130 கோடி) ஊதியம் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ப்ராட்காம் சிஇஓ ஹாக் டான் 767.7 மில்லியன் டாலர் (ரூ.6,350 கோடி) ஊதியம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.