NEET: நீட் விவகாரத்தில் தனி விவாதம் கோரிய ராகுல்; அவையை ஒத்திவைத்த ஓம் பிர்லா… விமர்சிக்கும் பாஜக!

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தனி விவாதம் நடத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் இன்று கோரிக்கை முன்வைத்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்திவைத்த விவகாரம், பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், 18-வது மக்களவையின் முதல் கூட்டம் திங்களன்று தொடங்கியது முதல் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான எதிர்ப்புக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நீட் (NEET)

நேற்று, மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில், வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் அரசு உறுதியெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டபோது, `நீட்… நீட்’ என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியரசுத் தலைவர் உரைமீது விவாதம் நடத்துவதற்கான கூட்டம் இன்று தொடங்கியது.

அப்போது, மக்களவையில் நீட் விவகாரத்தில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை (முக்கிய பிரச்னைமீது விவாதம் நடத்துவதற்காக அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான கோரிக்கை தீர்மானம்) அவையில் தாக்கல்செய்தார்.

அதைத் தொடர்ந்து அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நீட் விவகாரத்தை முக்கிய பிரச்னையாக நாங்கள் கருதுகிறோம் என்று இந்திய மாணவர்களுக்கு, எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பாக ஒரு கூட்டுச் செய்தியை வழங்கக் கோருகிறோம். இதை ஒரு முக்கியமான பிரச்னையாக நாங்கள் கருதுகிறோம். மேலும், நீட் தேர்வு குறித்து விவாதம் இன்று நடத்த வேண்டும்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, “குடியரசுத் தலைவர் உரைமீதான விவாதத்தின்போது ​​ஒத்திவைப்பு தீர்மானம், பூஜ்ஜிய நேர விவாதம் எடுத்துக்கொள்ளப்படாது. குடியரசுத் தலைவர் உரைமீதான விவாதத்தின்போது நீங்கள் (எதிர்க்கட்சிகள்) எந்தப் பிரச்னையையும் எழுப்பலாம். நீங்கள் எழுப்பும் பிரச்னைகளுக்குப் பதிலளிக்குமாறு அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

அப்போது, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நேற்று, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில், நீட் விவகாரம் குறித்து இன்று விவாதம் நடத்த வேண்டும் என்பது ஒருமனதாக இருந்தது. இது இளைஞர்களின் பிரச்னை, இதில் முறையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவாதத்தில் பிரதமரும் கலந்து கொள்ள வேண்டும். இந்திய அரசும், எதிர்க்கட்சிகளும் மாணவர்களைப் பற்றி ஒன்றாக விவாதிக்கின்றன என்ற செய்தி நாடாளுமன்றத்திலிருந்து வரவேண்டும்” என்று தெரிவித்தார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

பின்னர், மக்களவை மீண்டும் கூடிய பிறகு, எதிர்க்கட்சிகள் விவாதத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்ப, “தெருக்களில் நடக்கும் போராட்டங்களுக்கும், நாடாளுமன்றத்தில் நடப்பவைக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன்” என ஓம் பிர்லா தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “நாடாளுமன்ற வரலாற்றில், குடியரசுத் தலைவர் உரைமீதான விவாதத்தின்போது, ​​வேறு எந்த பிரச்னையும் விவாதிக்கப்படவில்லை” என்று கூறினார். அதையடுத்து, அவையை ஜூலை 1-ம் தேதி வரை ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே கோஷங்களை முன்வைத்தபோது, ஓம் பிர்லாவின் வார்த்தைகளையே துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கரும் உச்சரித்தார். மேலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா, “விசாரணை முடியும் வரை, நீட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. அரசு இதில் தனது கடமையைச் செய்துவருகிறது. அது முடியும் வரை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முடிவெடுக்க முடியாது. தேவையற்ற சலசலப்புகளை உருவாக்க வேண்டாம்” என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, “குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மற்றொரு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுவரை இது நடந்ததில்லை. நாம் அனைவரும் நாட்டுக்கு சேவை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். நமது விதிகளை நாமே மாற்றக் கூடாது. அவர்களிடமிருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று விமர்சித்தார்.