காட்டூர் ஏரியில் மண் எடுப்பதற்கு எதிராக மக்களுடன் இணைந்து போரட்டம் நடத்திவருவதால் தனக்கு தொடர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், ஏரி பிரச்னையில் முதலமைச்சர் தலைவிட்டு தீர்வுகாண வேண்டும் எனவும் இயக்குநர் கோபி நயினார் கோரிக்கை வைத்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, மீஞ்சுருக்கு அருகில் இருக்கிறது காட்டூர் கிராமம். சுமார் 7,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த ஊரில் 362 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது காட்டூர் ஏரி. காட்டூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ஏரியை நம்பிதான் விவசாயம் செய்துவருகின்றனர். மேலும், ஊர் மக்கள், கால்நடைகள், பறவைகள் என அனைத்து உயிர்களுக்குமான குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கிவருகிறது.
இந்த நிலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் சாலை அமைக்கும் பணிகளுக்காக இந்த ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் அதற்கு ஊராட்சிமன்றத் தலைவர் முதல் காட்டூர் காவல்துறையினர் அரசு அதிகாரிகள் என அனைவரும் உடந்தையாக செயல்படுவதாகவும் அந்த ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே பேசியபோது, “மக்களிடம் எந்த கருத்துக்கேட்பும் நடத்தாமல், தனியார் முதலாளிகளிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு எங்கள் ஊர் ஏரியை கபளிகரம் செய்ய முயற்சிக்கிறார்கள். வேண்டுமென்றே ஏரியின் மதகுகளை உடைத்து தன்ணீரை வெளியேற்றுகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் கண்டுகொள்ளாமல் கடந்து போகிறார்கள்.
இதுவரை காட்டூர் ஏரியில் மண் அள்ளும் திட்டம் எதுவுமில்லை என்று சொல்லிவந்தார்கள்…ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டூர் ஏரியில் இரண்டு ஹூண்டாய் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டுவந்து மணல் அள்ள முயற்சித்தார்கள். நாங்கள் அதை தடுத்து நிறுத்தி ஓட்டுநர்களையும் வாகனத்தையும் காட்டூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம். விசாரித்ததில் மண் எடுப்பதற்காக பூமி பூஜை போட வந்ததாகவும், ஊராட்சி மன்றத்தலைவரும் இதில் கலந்துகொண்டதாகவும் தெரியவந்தது. இது இத்துடன் முடியப்போவதில்லை; எங்கள் ஊர் இளைஞர்களை இழுத்து லட்சக்கணக்கில் பணம் தருவதாக யார்யாரோ பேரம் பேசுகிறார்கள். இதன் பின்னணியில் பெரும்புள்ளிகள் இருப்பதாக சந்தேகப்படுகிறோம். என்ன நடந்தாலும் எங்களின் காட்டூர் ஏரியிலிருந்து ஒரு கைப் பிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்!’ என தெரிவித்தனர்.
இதுகுறித்து காட்டூர் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராமனிடம் பேசினோம், “ஆறு மாசத்துக்கு முன்னாடியே மணல் எடுக்குறது சம்மந்தமா என்கிட்ட வந்து பேசுனாங்க. நான் அவர்களிடம், `ஊர் மக்களிடம் கருத்துக்கேட்டுக்கொள்ளுங்கள் அவர்கள் விருப்பம்தான் என் விருப்பம். இதில் தனிப்பட்ட முறையில் நான் எதுவும் முடிவு எடுக்கமுடியாது’ எனத் தெளிவாக சொல்லிவிட்டேன். அதன்பிறகு கனிமவளத்துறையிடம் ஆர்டர் காப்பி வாங்கிவிட்டு வருவதாகச் சொல்லி சென்றுவிட்டார்கள். இப்போது, காட்டூர் ஏரியில் மண் எடுப்பதற்காக கனிமவளத்துறையில் ரூ.86 லட்சம் பணம் கட்டிவிட்டார்கள். இன்னும் ஆர்டர் காப்பி வராத நிலையில், `நல்ல நாளாக இருக்கிறது முதலில் பூஜை போட்டுவிடலாம்’ எனக்கூறி இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்தார்கள். என்னையும் அழைத்தார்கள். நானும் சென்றுவிட்டு வந்தேன்.
அதற்குள்ளாக பிரச்னை வந்துவிட்டது. பொக்லைன் ஓட்டுநர்கள்மீது கேஸ் போட்டிருக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் மட்டுமல்ல அருகிலுள்ள கடப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் மண் அள்ளுவதற்கும் கிராமத்துக்கு ரூ.10 லட்சம் என விலைபேசி எல்லாம் முடிந்துவிட்டது. எங்கள் ஊரில்தான் பிரச்னை. எனக்கு பணம் வாங்கவேண்டும் என எந்த அவசியமும் இல்லை; கடவுள் புண்ணியத்தில் நான் நலமாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், காட்டூர் ஏரியில் மண் எடுத்தாலும் எனக்கு பிரச்னை இல்லை; எடுக்கவில்லை என்றாலும் எனக்கு பிரச்னை இல்லை!” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில்தான், அறம், மனுசி படங்களின் இயக்குநர் கோபி நயினார், காட்டூர் ஏரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்,
அந்த வீடியோவில், “தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 ஏரிகளில் ஒன்று எங்கள் கிராமத்தின் காட்டூர் ஏரி. இந்த ஏரியை நம்பிதான் இங்கிருக்கும் பல்வேறு கிராம மக்கள் விவசாயம் செய்து, வாழ்ந்துவருகின்றனர். குடிநீர் தேவை மட்டுமல்லாமல் அனைத்துக்கும் இந்த ஏரிதான் எங்களுக்கு மூலதனம். தற்போது இந்த ஏரியில் மண் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மண் எடுக்கக்கூடாது என கோரிக்கை வைத்து நானும் என் கிராமமக்களும் போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் தாசில்தார், நீர்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால், மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் அதிகாரிகள் செயல்பட்டுவருகிறார்கள். காட்டூர் ஏரி மட்டுமல்ல பொன்னேரி தொகுதியைச் சுற்றியுள்ள எல்லா ஏரிகளிலும் மண் எடுக்க கைவைத்து வருகிறார்கள். சாலைகள் போடுவது, கட்டடங்கள் கட்டுவது மட்டும்தான் நாட்டின் வளர்ச்சியா? விவசாயத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி இல்லையா? விவசாயத்திற்கு நீராதாரமான ஏரிகளை அழித்து மண் எடுப்பது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், “உலகம் முழுக்க நாம் தமிழர்கள், திராவிடர்கள் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம். அப்படிப்பட்ட தொன்மையான சமூகத்தின் அறிவுச்சொத்தான நம் முன்னோர்கள் உருவாக்கிய ஏரிகளை நிர்மூலமாக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மண் எடுக்க எத்தனையோ இடங்கள் இருக்கும்போது, எங்கள் ஊர் மக்களிடம் கருத்து கேட்காமல், எங்களுக்கே விருப்பம் இல்லாமல் எங்களை மீறி எங்கள் ஏரிகளில் மண் எடுக்க வருகிறார்கள். இந்த ஏரியில் மண் எடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த ஏரியும் வறண்டு விவசாயம் பாதிக்கப்படும். எங்கள் ஊர் மக்கள் முதல் கால்நடைகள், பறவைகள், சிறுசிறு உயிர்கள் வரை குடிநீருக்குத் திண்டாடும் நிலை ஏற்படும். எனவே, தயவுசெய்து எங்களின் காட்டூர் கிராமத்தின் ஏரியை மண் எடுப்பதிலிருந்து காப்பாற்றித்தர வேண்டும் என தமிழக முதலைச்சர் ஐயா ஸ்டாலினுக்கு பணிவான கோரிக்கையை முன்வைக்கிறேன்!” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
இதுகுறித்து இயக்குநர் கோபி நயினாரை நாம் தொடர்புகொண்டு பேசியபோது, “காட்டூர் கிராமம் நான் பிறந்து வளர்ந்த என் சொந்த ஊர். காட்டூர் ஏரிதான் எங்களுக்கு எல்லாமே. ஆனால், அரசு அதிகாரிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் சேர்ந்துகொண்டு எங்கள் ஏரியில் மணல் அள்ள முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடிவருகிறேன். தெரியாத எண்களிலிருந்து அடையாளம் தெரியாத பலரும் எண்ணைத் தொடர்புகொண்டு `எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் சார்… இதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்’ என என்னிடமே பேரம் பேசுகிறார்கள். நான் கடுமையாகப்பேசி மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து மக்களுக்காகவும் ஏரிக்காகவும் போராடி வருகிறேன். இந்தநிலையில், இதேபோன்ற பல எண்களிலிருந்து எனக்கு அழைத்துப் பேசி கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துவருகிறோம். காட்டூர் ஏரியிலிருந்து மண் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!” என கொந்தளிப்புடன் பேசினார்.