மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழைகாலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மூன்று மாதங்களில் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்க இருப்பதால், இன்று துணை முதல்வர் அஜித் பவார் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. இதில் 21-60 வயது வரையிலான தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும். அதோடு முக்கிய மந்திரி அன்னபூர்னா யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து பேர் இருக்கும் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சம் இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பயிற்சி கொடுக்கப்படும். இதற்கு இளைஞர்களுக்கு மாதம் 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 34 ஆயிரம் இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 65 பைசா குறைகிறது. டீசல் விலை ஒரு லிட்டர் 2.07 ரூபாய் குறைகிறது.
பால் கொள்முதலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 மானியம் கொடுக்கப்படும். 44 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். வெங்காயத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.350 மானியம் வழங்கப்படும். நவிமும்பை மாபேயில் ஜூவல்லரி பார்க் அமைக்கப்படும்.
பண்டர்பூருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு மண்டலுக்கும் ரூ.20 ஆயிரம் மற்றும் இலவச மருத்துவ வசதி செய்யப்படும். 10 ஆயிரம் பெண்களுக்கு இ ரிக்ஷா வாங்க நிதியுதவி செய்யப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க 100 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதோடு 25 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக்கும் வகையில் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உயர்படிப்பு படிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்களின் கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படும் என்பது உட்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.