வழக்கத்திற்கு மாறான வெப்பம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொள்ளவில்லையெனில் ஆபத்துகள் அதிகமாகலாம் என்பது போன்று பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
அந்தவகையில் வாஷிங்டனில் உள்ள கேரிசன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரித்த வெப்பத்தினால் உருகியுள்ளது. இந்தச் சிலை உள்நாட்டு போரின் விளைவுகளை குறிக்கும் விதமாக சாண்டி வில்லியம்ஸ் IV-ன் கலைநயத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆபிரகாம் லிங்கன் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும் ஆறடி உயரமுள்ள இந்தச் சிலையின் தலை, சுட்டெரித்த வெப்பத்தினால் உருகி, தொங்கத் தொடங்கியது. படிப்படியாக கால்கள் மற்றும் உடலும், நாற்காலியும் உருகியுள்ளன.
தற்போது லிங்கனின் தலை தனியாக வந்துவிட்டதால் அதனை சரிசெய்யும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலையில்லாமல் ஒரு கம்பி மட்டும் மெழுகுச்சிலையில் இருக்கிறது.
இது போன்று சிலை உருகுவது முதல்முறையல்ல என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே 2023-ல் செய்யப்பட்ட மெழுகுச் சிலையில் நூறு திரிகள் (wicks) இருந்தன. அது மக்கள் ஏற்றுவதற்காக வைக்கப்படவில்லை.
ஆனால், அதனை கண்ட மக்கள் அனைத்து திரிகளையும் மொத்தமாகப் பற்ற வைத்துள்ளனர். இதனால் சிலை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அதனால் இரண்டாவது முறையாக 2024 பிப்ரவரியில் பத்து திரிகளை மட்டும் வைத்து சிலை உருவாக்கப்பட்டது. தற்போது வெப்பத்தினால் உருகிய மெழுகுச் சிலையின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து சாண்டி வில்லியம்ஸ் கூறுகையில், “ஒருவேளை நாம் வாழும் இடத்தில் தட்பவெப்பநிலை மோசமாகிவிட்டால், மெழுகுச் சிலைகள் உருகும். அப்போது இந்த வேலை சுற்றுச்சூழலின் கலைப் படைப்பாக இருக்கும் என்று ஒரு முறை கிண்டல் செய்திருந்தேன். அது இந்தக் கோடையில் நடக்கும் என்று எனக்குத் தெரியாது’’ என்று கூறியுள்ளார்.