ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு; நெருக்கடி… தலைமறைவானாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

2016 சட்டமன்றத் தேர்தலில் கரூர் எம்.எல்.ஏ-வாக வெற்றிப் பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 2016-2021 வரை அந்த துறைக்கு அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, ஜி.பி.எஸ் கருவி கொள்முதல் ஊழல் புகார் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புகார் அளிக்கும் பிரகாஷ்

இந்நிலையில், ‘முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார்’ என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்று தொழிலதிபர் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து, கரூர்- மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகாரளித்து இருந்தார்.

இதன் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்ற அச்சப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூன் 12-ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25-ம் தேதி நடந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆனால், முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த சில நாள்களாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இருந்து வெளியேறி, தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான புள்ளிகளிடம் பேசினோம்.

“எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பிரகாஷ் நல்ல பழக்கம். அவர்களுக்குள் அதிகப்படியான பணம் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் விஜயபாஸ்கருக்கு பினாமிபோல செயல்பட்டு, நிலத்தில் முதலீடு செய்திருக்கிறார் பிரகாஷ். ஆனால், சமீபகாலமாக இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து, விஜயபாஸ்கர் முதலீடு செய்த சொத்துகளை கேட்டதில், தகராறு ஏற்பட்டு இருக்கிறது. நிலத்தை பிரகாஷ் விட்டு தரவில்லை என்பதால், அவருக்கு தெரியாமல் நிலத்தை அவரது மகள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் சி.பி.சி.ஐ.டி-யும்., லஞ்ச ஒழிப்புத்துறையும் கண்காணித்து இருக்கிறது. தற்போது பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதால், விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் அவரது பெயர் எஃப்.ஐ.ஆரில் இல்லையென்றாலும், பின்னணியில் சிக்கல் இருக்கிறது. அதனால்தான், முன்ஜாமீன் கோரியிருந்ததார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆனால், இந்த வழக்கை மையமாக வைத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு சொத்து குவிப்பு வழக்கை இருக்கி பிடிக்க வாய்ப்பு இருப்பதாக மேலிடத்தில் இருந்து தகவல் வந்ததால்தான், கரூரை விட்டு வெளியேறி இருக்கிறார். தலைமறைவாக இருப்பதால்தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக மாநில முழுவதும் நடந்த அதிமுக போராட்டம் கரூரில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்தில் அதீதநம்பிக்கை கொண்டவர் என்பதால், கோயில் கோயிலாகவும் சென்றுவருகிறார்” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb