`தாமரை தண்ணீரிலே இருந்தாலும், ஒருபோதும்..!’- சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அட்வைஸ் வழங்கிய டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய இணையமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்ற பின்னரும், மக்களைவையின் சபாநாயகர் யார் என்பது முடிவாகாமல் இருந்தது. சபாநாயகர் பெரும்பாலும் ஆளுங்கட்சி அல்லது ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், துணை சபாநாயகர் எதிர்க்கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது எதிர்க்கட்சியிலிருந்து துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஆளும் கூட்டணி உத்தரவாதம் தராததால், கடந்த 10 ஆண்டுகளுக்கு அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருக்கும் காங்கிரஸ், மக்களவை சபாநாயகருக்கு போட்டியாளரை நிறுத்த முடிவுசெய்தது.

ஓம் பிர்லா

இதனால், 1976-க்கு பிறகு மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. அதன்படி, பா.ஜ.க அங்கம் வகிக்கும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தங்களின் வேட்பாளராக, கடந்த முறை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை முன்னிறுத்தியது. அதேபோல், 8-வது முறையாக எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கே.சுரேஷ் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக முன்மொழிந்தது. இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஓம் பிர்லா சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள், `கடந்த ஆட்சியில் நடந்ததைப்போல அல்லாமல், எந்த அளவுக்கு ஆளுங்கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறிய கட்சிகளையும் மதிக்க வேண்டும். ஒரு சார்பாக இருக்கக் கூடாது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கக் கூடாது’ போன்ற கோரிக்கைகளையும் அழுத்தமாக முன்வைத்தனர். அந்த வரிசையில் தி.மு.க மூத்த எம்.பி டி.ஆர்.பாலு, ஓம் பிர்லாவுக்கு ஒரு குட்டி ஸ்டோரி கூறி தனது கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

தனது உரையில் டி.ஆர்.பாலு, “எனது கட்சியின் சார்பாகத் தங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் தாமரைச் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். தாமரை எப்போதும் தண்ணீரில் மிதக்கும். ஆனால், ஒருபோதும் தண்ணீரை தனக்குள் அனுமதிக்காது. அதுபோல, பா.ஜ.க-வினரால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இனிமேல் உங்களுக்கும் இந்த அவைக்கும் இடையில் அரசியல் இருக்க முடியாது. உங்களுக்கு எந்த சாயமும் இருக்க முடியாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் நீங்கள் ஒரேமாதிரி நடத்தவேண்டும். என்னுடைய ஒரே வேண்டுகோள், தயவுசெய்து ஒருசார்பற்றவராக இருங்கள்” என்று கூறினார். டி.ஆர்.பாலுவின் உரையை ஆமோதித்து சக எம்.பி-க்கள் மேசையைத் தட்ட, ஓம் பிர்லாவும் உரையைக் கேட்டு புன்னகைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb