`1975 Emergency; பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
1975-ல் இந்தியா முழுவதும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட தினம் இன்று (ஜூன் 25). இந்த தினத்தை பா.ஜ.க-வினர் கறுப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன்.ரவி, `பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது. ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி,
புத்தகங்கள், உடைகளைக்கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்? சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்.” என்று பதிவிட்டிருக்கிறார்.