வேலையை பொறுத்தும், நிறுவனத்தில் ஒருவரின் பதவியை பொறுத்தும் சம்பளம் மாறுபடும். அந்தவகையில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி கடந்த நிதியாண்டில் ரூ.9.26 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். இது அவரது நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளின் சம்பளத்தை விடக் குறைவு.
அதானி துறைமுகம், எரிவாயு (ports-to-energy) என பல தொழில்களில் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அவருக்குச் சொந்தமான 10 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் துறைமுகம், எரிவாயு சார்ந்த இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே அதானி சம்பளத்தை பெற்றிருக்கிறார்.
*அதானியின் சம்பளம்…
2023-24 நிதியாண்டில், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து (AEL) 2.19 கோடி ரூபாய் சம்பளம், 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் என மொத்தமாக 2.46 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார். துறைமுக நிறுவனத்திலிருந்து (APSEZ) 6.8 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார். மொத்தமாக இவரின் சம்பளம் 9.26 கோடி ரூபாய்.
*அதானியின் சம்பளம் நிர்வாகிகளை விடக் குறைவு…
அதானியின் சம்பளம் இந்தியாவில் உள்ள பெரிய குடும்பங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களின் தலைவர்கள் வாங்கும் சம்பளத்தை விடக் குறைவாக உள்ளது.
இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானி கோவிட் தொற்றுக்கு முன்னர் வரை ஆண்டுதோறும் 15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வந்தார்.
கடந்த 2022-23 நிதியாண்டில் தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல் ரூ.16.7 கோடியும், ராஜீவ் பஜாஜ் ரூ.53.7 கோடியும், பவன் முஞ்சால் ரூ.80 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர். எல் அண்ட் டி தலைவர் எஸ்.என் சுப்ரமணியன் ரூ.51 கோடியும் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சலீல் பரேக் ரூ.66 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் இயக்குநர் வினய் பிரகாஷ் ரூ.89.37 கோடியும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ வினித் எஸ். ஜெயின் ரூ.15.25 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர். இவர்கள் வாங்கும் சம்பளமானது அதானியின் சம்பளத்தை விட அதிகம்.
அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.8.37 கோடியும், அவரது மருமகன் பிரணவ் அதானி ரூ.6.46 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர். அதானியின் மகன் கரண், ரூ.3.9 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். அதானிக்கு மிகவும் நெருக்கமான உறவுகளாக இருக்கும் இவர்கள் மூவரும் ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.