தூத்துக்குடி: வெள்ளத்தால் சேதமடைந்த முக்காணி பாலம்… ஏழு மாதங்களாகியும் சீரமக்கப்படாத அவலம்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாமல், வெள்ளத்தின் பசிக்கு இரையாயின. சிறு பாலங்கள் முதல் பெரிய பாலங்கள் வரை சேதமடைந்தன. அதிலும் பதபதைக்க வைத்தது ஏரல் ஆற்றுப் பாலம். அது வெள்ளத்தின் வேகத்தில் துண்டாக உடைந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.

அதே போல ‘நான் எப்போது வேண்டுமானாலும் விழுவேன்’ என வாகன ஓட்டிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முக்காணி ஆற்றுப்பாலம்.

தூத்துக்குடி- கன்னியாகுமரி மாநில நெடுஞ்சாலை (SH-176) ல் முக்காணி பகுதிக்கு அருகே இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 1954 ஆம் ஆண்டு சிறிய அளவில் தரைப்பாலம் கட்டப்பட்டது. அது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், பாதுகாப்பு கருதி புதிய பாலம் ஒன்று கடந்த 2015 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இரு பாலங்களும் ஒரு வழிப்பாதைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதிய பாலத்தின் நடுவில் விரிசல் ஏற்பட்டது. அதனால் பாலத்தின் நடுவே உள்ள இரண்டு தூண்களுக்கு நடுவில் உள்ள பகுதி கீழே இறங்கி வளைந்து காணப்பட்டது. அதனால் வாகனங்கள் புதிய பாலம் வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டு, எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டன.

ஆனால் பழைய பாலத்தில் பெருமளவு சேதங்கள் இல்லையென்றாலும், இருபுறமும் உள்ள பாதுகாப்பு கம்பிகள் வெள்ளபாதிப்பிற்கு உள்ளாகி பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன. அதில் பாதியளவிலான கம்பிகள் சீரமைக்கப்பட்டாலும் பெருமளவு இன்னும் சீரமைக்கப்படாமலே உள்ளன.

புதிய பாலம் ஏழு மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில், அனைத்து கனரக, இருச்சக்கர வாகனங்களும் பழைய பாலத்தின் வழியாக செல்லும் நிலை உள்ளது.‌ அதோடு சில இருச்சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆபத்தை உணராமல், பாதுகாப்பு தடுப்பையும் மீறி புதிய பாலத்தின் வழியாகவே செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் சண்முகநாதன், “நா பிறந்ததுலே இருந்தே இந்த ஊர்ல தான் இருக்கேன். நா பிறக்குறதுக்கு முன்னாடியே தர பாலம் கட்டிடாங்க.. அப்புறம் இப்போ கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி புது பாலம் கட்டுனாங்க.

போன வருசம் வந்த வெள்ளத்துல புது பாலம் நடுவுல விரிசல் மாதிரி விட்டுறுக்கு. தர பாலத்துக்கு ரொம்ப டேமேஜ் இல்லாததால, வண்டிக எல்லாம் அதுல தான் போகுது வருது. அதுவும் இன்னும் எவ்வளோ நாளைக்கு தாங்கும்ன்னு தெரியல.. அதிகாரிங்க சீக்கிரமா புது பாலத்த சரி பண்ணுனா நல்லா இருக்கும்” என்றார்.

வெள்ளத்தால் சேதமடைந்த இந்த பாலத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. விபரீதங்கள் நடக்கும் முன்னரே நடவடிக்கை எடுப்பதே பாதுகாப்பானது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88