சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில், நேற்று அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து பேரவைக்கு வருகை தந்து, அமளியில் ஈடுபட்டதால் சபாநயாகரால் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் முதல்வரின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு பேரவையில் பங்கேற்க அனுமதியளித்தார். ஆனால் அதை அ.தி.மு.க உறுப்பினர்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். அதற்கு சபாநாயகர், “சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து அறிந்த உறுப்பினர்கள், நாகரீகமாக நடந்துகொள்ளவேண்டும். உங்களுக்கான நேரம் வரும்போது நீங்கள் பேசலாம். இங்கு எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
அதைப் புறக்கணித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,“இன்றும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதியளிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இன்றைய தினம் எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 183 பேர் கள்ளச்சாரயம் அருந்தி பாதிக்கப்பட்டதாகவும், அதில் 55 பேர் உயிரிழந்ததாகவும் தெரியவந்திருக்கிறது.
நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால், அரசு மெத்தனப்போக்கில் செயல்படுகிறது. நான் மருத்துவமனையில் கள்ளச்சாராயத்துக்கு மருந்து இல்லை எனக் குறிப்பிட்ட மருந்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாற்றி கூறுகிறார். மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு காலதாமதமாக வந்ததால்தான் பலி எண்ணிக்கை அதிகரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த தாமதத்துக்கு காரணம் யார்…. ஆட்சியர்தானே. அவர்தான் உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை. வதந்தியை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
அதனால்தான் மக்கள் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. எனவே, இந்த மரணங்களுக்கு காரணம் இந்த அரசின் நிர்வாகத் திறனில்லாததுதான். கள்ளச்சாராய விவகாரம் முதல்வருக்கும், டி.ஜி.பி-க்கும் தெரியாது என தி.மு.க கூட்டணியில் இருக்கும் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். அப்படியானால், இதைக் கூட தெரிந்துகொள்ளமல் இருப்பதற்கு எத எதற்கு அரசு… அதிகாரிகள்… இத்தனைக்கும் அந்தக் கள்ளச்சாராய விற்பனை காவல்துறை, நீதிமன்றத்துக்கு அருகில்தான் நடந்திருக்கிறது. தி.மு.க-வின் 2 கவுன்சிலர்களுக்கும், ஒரு எம்.எல்.ஏ-வுக்கும் இதில் தொடர்பிருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
எனவே, இதற்கு தீர்வு காணவேண்டுமானால், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமானால் சிபிஐ விசாரணை தேவை. மக்களுடைய உயிர் பிரச்னையை விட சட்டமன்றத்தில் விவாதிக்க வேறு என்ன பிரச்னைகள் இருக்கின்றன. முதல்வருக்கு உண்மையில் தைரியம் இருந்திருந்தால், நேற்று நாங்கள் கேள்வி எழுப்பியபோதே எங்களுக்கு பதிலளித்திருக்க வேண்டும்” எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88