“சட்டவிரோத மது விற்பனை செய்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நடவடிக்கை எடுக்காத காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் கடந்த வாரம் ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்னும் சிலர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது “முன்ஜாமீன் வழங்கக்கூடாது, இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை” என்று வாதிட்ட பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர், சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமான போட்டோக்களையும், வீடியோக்ககையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, “மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் கள்ளக்குறிச்சியில் பல அப்பாவிகள் இறந்துள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது. இதை போன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா?” என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
“சட்ட விரோத மது விற்பனையை பொதுமக்களே வீடியோவும் புகைப்படமும் எடுத்த பின்பும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இவர்களுக்கு உதவியாக உள்ள காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?” என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யப்படுவார்கள்” என உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து, “சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88