கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, கறுப்பு உடையில் வந்த அ.தி.மு.க உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் விவாதிக்க பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
மேலும், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், சட்டப்பேரவையை நிகழ்வுகளை ஒத்திவைத்துவிட்டு இவைகளை விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபடுபவர்களை வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் குண்டுகட்டாக சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,“ எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி பல்வேறு மருத்துவமனைகளில் 96 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 146 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதில் 50 பேர் இறந்திருப்பதாகவும், இதில் 14 பேர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்தெல்லாம் சட்டமன்றத்தில் பேச வேண்டும் பேச வாய்ப்பளிக்கக் கேட்டோம்.
ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. கள்ளச்சாராயம் அருந்தி இறந்த விவாகரத்தில் ஏழை எளிய மக்கள் பதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இது குறித்துப் பேச அனுமதிக்காமல், நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டிய சபாநாயகர், எங்களை வெளியேற்றியது வருத்தமளிக்கிறது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாரை அலாக்காக தூக்கி வெளியேற்றி கைது செய்திருக்கிறார்கள். இந்த அடக்குமுறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக படுகொலை நடக்கிறது. எதிர்க்கட்சிகளை அடக்குகின்ற போக்கும், ஹிட்லர் ஆட்சி போன்ற சர்வாதிகார ஆட்சியைப் பார்க்கிறோம். இது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் உயர் அதிகாரிகளுடன் போதை ஒழிப்பு தொடர்பாகக் கூட்டம் நடத்துகிறார். அப்படி இருந்தும் ஏன் கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் பொம்மை முதல்வரின் திறமையற்ற அரசு நிர்வாகம். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் தான், காவல் நிலையத்துக்கு சில நூறு மீட்டர் தூரத்தில், மாவட்ட ஆட்சியாளர் அலுவலக அருகில் என்றெல்லாம் கள்ளச்சாராயம் விற்ற இடங்களாக அறிய முடிகிறது. மூன்றாண்டுகளாக இந்த விற்பனை நடப்பதாகக் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள்… உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது…. இன்னும் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை, போதிய மருந்துகள் இல்லை. ஆனால் அனைத்து மருந்துகளும் இருக்கிறது என அமைச்சர் பொய் சொல்கிறார். எனவே, இந்த சூழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.” எனக் காட்டமானார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88