கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் மதுரை ரயில்வே கோட்டத்திலுள்ள பூட்டிய ரயில்வே கேட்டுகளில் மோதி விபத்து ஏற்படுத்திய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் அலுவலர்கள் தெரிவிக்கும்போது, “ரயில்களை விபத்து இல்லாமல் இயக்க சாலைகள் சந்திக்கும் இடங்களில் லெவல் கிராஸிங் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் வரும்போது இந்த கேட்டுகள் இருபுறமும் பூட்டப்படும். இதன் மூலம் ரயிலில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும் வேகமாக வாகனங்களை இயக்குபவர்களின் கவனக்குறைவால் ரயில்வே கேட்டுகளில் மோதி இடித்து விபத்து உண்டாக்குகின்றனர்.
மதுரை கோட்டத்தில் மட்டும் இது மாதிரி விபத்துகளில் சிக்கிய 74 வாகனங்கள் கடந்த ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டன. இது போன்ற குற்றச்செயல்களுக்கு ரயில்வே சட்டப்படி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ரயில்வே கேட்டுகளுக்கு முன்பாக இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
“பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரயில் பாதையைக் கடந்து விபத்தைத் தவிர்க்க வேண்டும்” என மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உலக லெவல் க்ராஸிங் விழிப்புணர்வு நாளில் மதுரை மண்டலப் போக்குவரத்து அலுவலகம, பெட்ரோல் பங்க்குகள், பேருந்து நிறுத்தங்கள், சந்தை வளாகங்கள், லெவல் க்ராஸிங் கேட்டுகள் அமைந்துள்ள இடங்களில் வாகன உபயோகிப்பாளர்களிடம் ரயில்வே மூலம் விழிப்புஉணர்வு பிரசாரமும் நடத்தப்பட்டது.