`ரௌடி கும்பல் தாக்குதல்; மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல்!’ – திமுக அரசைச் சாடும் இபிஎஸ்

கடந்த சனிக்கிழமை போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் சென்னை அபிராமபுரம் காவல்துறை, மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மந்தவெளியைச் சேர்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தது. அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு உடல் நலத் தகுதிச் சான்று பெறுவதற்காக, நேற்று மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கைது

அப்போது அங்கு வந்த திருநங்கை உட்பட ஐந்து பேர், கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறியும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மிரட்டியிருக்கிறார்கள். அவர்களைத் தடுக்க முயன்றபோது, அந்த கும்பல் மருத்துவமனை வளாகத்திலிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த கண்ணாடிகள், நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் கருவிகள், கணினி உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கி அத்துமீறியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது.

இதற்கிடையில் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைதுசெய்ததற்கு எதிர்ப்பாக ரௌடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம், கடும் கண்டனத்திற்குரியது.

எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா தி.மு.க ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இன்றைக்கு நிலவுகிறது. இந்த விடியா தி.மு.க அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய ரௌடி கும்பல்மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு, இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா தி.மு.க அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb