நாடாளுமன்றத் தேர்தலில், வெளியான கருத்துக்கணிப்புகளை தாண்டி, 234 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா கூட்டணி. பெரும்பான்மைக்கு இன்னும் 38 இடங்களே தேவைப்படும் நிலையில் அடுத்தகட்ட முடிவுகள் குறித்துத் திட்டமிட, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு அடுத்த நாள் டெல்லியில் நடைபெற்றது. ஆனால், அந்த ஆலோசனைக் கூட்டத்தில், “ஆட்சி அமைக்கத் தேவையான நம்பர் நமக்கு இல்லை. இழுத்துப் பிடித்து ஆட்சியெல்லாம் அமைக்க வேண்டாம். பழைய பலத்தில் அவர்கள் இல்லை. எனவே, இனி அவர்கள் நினைத்ததெல்லாம் செய்ய முடியாது’ என சில தலைவர்கள் ஆலோசனை சொல்ல, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, “இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதான் அதிக எண்ணிக்கையில் வென்றிருப்பதால், அது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸிடமே விட்டுவிட்டோம்” என்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணித் தலைவர்கள்.
இதையடுத்து இந்தியா கூட்டணி சார்பில் யார் எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்பு இருக்கிறது என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. அது தொடர்பாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்…
“எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்திதான் இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய எண்ணமும். ஆனால், ராகுல் காந்தி அதற்கு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்” என எடுத்த எடுப்பிலேயே ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கப் போவதில்லை என்பதை உடைத்தவர்கள் அதற்கான காரணத்தை அடுக்கினார்கள்… “எதிர்க்கட்சித் தலைவர் அல்ல இந்தியா கூட்டணி வெற்றியே பெற்றிருந்தாலும் அவர் பிரதமராகவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். ஏனெனில், 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதில் ராகுலுக்கு ஆர்வம் இல்லை. அதுமட்டுமல்ல இந்த ஆண்டு மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கெல்லாம் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. எனவே, அதைத் தக்க வைத்துக்கொள்வதற்கான அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபடவே ராகுல் விரும்புகிறார். கட்சி மற்றும் நிர்வாகரீதியில் இரண்டாவது வரிசையில் இருந்து வேலை பார்க்கவே ராகுலுக்கு விருப்பம்.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பைக் கூட்டணிக் கட்சியினருக்குக் கொடுக்கத்தான் விருப்பம். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் அதற்கு அனுமதிக்காது. என்பதால், காங்கிரஸ் கட்சியிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்திருக்கிறார்கள்.” எனக் காரணங்களை அடுக்கியவர்கள்…
“சண்டிகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரியை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்படலாம் என்கிறார்கள். சீனியர் அவர், வழக்கறிஞர்.. பா.ஜ.க-வுக்குச் சரியாகப் பதிலடி கொடுப்பதற்கு அவரே சிறந்தவர் என நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. இல்லையென்றால் அசாமைச் சேர்ந்த கௌரவ் கோகோய், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சசி தரூர் என இவர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்படலாம்” என்கிறார்கள்… இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான விடை கிடைக்கும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88