`கட்சித் தலைவரின் துரோகமே தோல்விக்கு காரணம்!’ – புதுச்சேரி பாஜக-வில் வெடித்த கோஷ்டி மோதல்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் களமிறங்கிய, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படுதோல்வியை சந்தித்திருக்கிறார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிட்டிங் எம்.பி வைத்திலிங்கம் 4,26,005 லட்சம் வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயத்தை 1,36,516 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். இந்த தோல்விதான் பா.ஜ.க கூடாரத்தில் தற்போது கோஷ்டி மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியின் ராஜ்யசபா எம்.பி-யும், பா.ஜ.க தலைவருமான செல்வகணபதியின் துரோகத்தால் பா.ஜ.க தோல்வியடைந்திருப்பதாக, அக்கட்சியின் முன்னாள் தலைவர் சாமிநாதன் ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி, கிளை, தொகுதி, மாவட்ட மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

புதுச்சேரி முன்னாள் பா.ஜ.க தலைவர் சாமிநாதன்

பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டதால், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் கூட்டணி ஆட்சியிலும் பாரதிய ஜனதா கட்சி பங்கு பெற்றது. இந்த நிலையில் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென்று கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் செல்வகணபதி அவர்கள், கட்சியில் காலம்காலமாக சித்தாந்த ரீதியில் பணியாற்றிய நிர்வாகிகளை நீக்கினார். கிளை, கேந்திரத்தை கலைத்துவிட்டு, சுயநலத்துடன் தன்னுடைய சொந்த நிறுவனம் போல கட்சியை தவறாக வழிநடத்தி வருகிறார். ஆளும் கட்சியின் அமைச்சராக இருக்கும் ஒருவர் முதல் முறையாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு தற்போதைய தலைவர் செல்வகணபதியும், அவரது மோசமான நிர்வாகத் திறமையும்தான் காரணம். எனவே இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 8,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்திற்கு வந்த என்னை தேர்தல் பணியாற்ற விடாமல் சதி செய்தார். அத்துடன், லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, `என் தொகுதியில் நான் வைத்ததுதான் சட்டம்’ என்று சுயநலமாக சிந்தித்தவர் செல்வகணபதி. மேலும் பல நிர்வாகிகளை லாஸ்பேட்டை தொகுதியில் வேலை செய்ய விடாமல் தடுத்து, புதுச்சேரி எம்.பி பதவியை காங்கிரஸுக்கு தாரை வார்த்த பெருமை செல்வகணபதியையே சேரும். எனவே கட்சியின் எதிர்கால நலன் கருதி, உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயம்

இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் தேசிய தலைமை ஆய்வு செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான பழைய நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, சித்தாந்த ரீதியற்ற புதியவர்களை நியமித்துக் கொண்டு தனக்குத்தானே மாபெரும் தலைவர் என்று நினைப்பது சரியல்ல. பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்து,  பா.ஜ.க-வை படிப்படியாக புதுச்சேரியில் வளர்த்தார்கள். ஆனால் இன்று செல்வகணபதி அவர்கள், குறுக்கு வழியில் நியமன எம்.எல்.ஏ, ராஜ்யசபா எம்.பி, மாநில பொருளாளர், மாநில தலைவர் என்று எந்த வேலையும் செய்யாமல் கட்சி பலனை அனுபவித்து வருகிறார். அத்துடன் ஒட்டுமொத்த கட்சிக்கு துரோகம் விளைவித்த மாநில தலைவரை, உடனடியாக தேசிய தலைமை மாற்ற வேண்டும் ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88