பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ஜ.க-வை இன்னும் அதிர்ச்சியில் வைத்திருக்கிறது. பா.ஜ.க-வின் கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கும் குறைவான இடங்களைப் பெற்ற பா.ஜ.க, அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பனாரஸ் தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி இரானி, அஜய் மிஸ்ரா, அர்ஜுன் முண்டா, ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் எனப் பலர் பெருமளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.
இந்த நிலையில், பெரிதாக அரசியல் பின்புலம் இல்லாமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றிருக்கின்றனர்.
அவர்கள் குறித்துப் பார்க்கலாம்;-
1. பஞ்சாப் மாநிலம், காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு,அஸ்ஸாமின் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அம்ரித்பால் சிங், சுயேச்சையாகப் போட்டியிட்டார். அதே தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர், பா.ஜ.க வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளர்களை விட 1,97,120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
2. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த பியாந்த் சிங்கின் மூத்த மகன் சரப்ஜீத் சிங் கல்சா, பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளாராகப் போட்டியிட்டார். இவரும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம் கட்சிகளின் வேட்பாளர்களைவிட 70,053 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
3. கோவாவின் டாமன் & டையு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர் படேல் உமேஷ்பாய் பாபுபாய். இவரும் பிரதான தேசியக் கட்சியான பா.ஜ.க வேட்பாளர் லாலுபாய் பாபுபாய் படேலைவிட 42,523 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
4. லடாக் தொகுதியில் முகமது ஹனீபா என்பவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இவரும் காங்கிரஸ் வேட்பாளர் செரிங் நம்கியால், பா.ஜ.க வேட்பாளர் தாஷி கியால்சன்லை தோற்கடித்து 27,906 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
5. பீகார் மாநிலம், பூர்னியா தொகுதியில் ஜனதா தள் வேட்பாளர் சந்தோஷ் குமாரை விட 23,847 வாக்குகள் வித்தியாசத்தில், சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ் வெற்றிப்பெற்றிருக்கிறார்.
6. மகாராஷ்டிரா மாநிலம், சங்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக சஞ்சய் பாட்டீல் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காததால் சுயேச்சை வேட்பாளராக விஷால் பாட்டீல் போட்டியிட்டார். இந்த தேர்தலின் முடிவில் 100053 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் வென்றிருக்கிறார்.
7. ஜம்மு – காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டவர் இன்ஜினீயர் ஷேக் அப்துல் ரஷீத். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார். சிறையில் இருந்தவாரே தேர்தலில் போட்டியிட்ட இன்ஜினீயர் ரஷீத் 2,04,142 வாக்குகள் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை தோற்கடித்திருக்கிறார்.