அமுல் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்தால் வரவேற்பதாக அறிவித்த ‘தமிழ்நாடு பால் முகவர்கள் – தொழிலாளர்கள் நலச் சங்கம்’, தற்போது ஆவினில் ரூ.1,900 கோடி நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக `பகீர்’ புகார் கிளப்பியுள்ளது.
இது குறித்து முதலமைச்சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்தாக ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததால், ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.328.5 கோடி வீதம், கடந்த 37 மாதங்களில் சுமார் 1,013 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மகளிருக்கு இலவச பேருந்து பயத் திட்டத்தால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை மானியமாக வழங்கி அரசு ஈடுசெய்யும்போது, பால் விற்பனை விலை குறைப்பால் ஏற்பட்டுள்ள சுமார் 1,013 கோடி ரூபாய் இழப்பை ஈடுசெய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாகவோ, அல்லது ஆவின் தரப்பிலிருந்து மானியம் கோரியதாகவோ தெரியவில்லை.
முன்னாள் அமைச்சர் நாசரின் மோசமான நிர்வாகத்தால் கடந்த 2022 நவம்பர் முதல் நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி, பச்சை, நீல நிற பால் பாக்கெட்டுகள் விலையை உயர்த்தாமல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதால், தற்போதுவரை 19 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.480 கோடிக்கு மேல் இழப்பு என்கிறது விவரமறிந்த ஆவின் வட்டாரம்.
தேவையான கொழுப்பு சத்து மற்றும் திட சத்து கையிருப்பு இல்லாததால் வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், ஆவின் நிறுவனத்திற்கு லிட்டருக்கு 15 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு, இதனால் மட்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், ஆவின் நெய், வெண்ணெய் உற்பத்தி முற்றிலுமாக சரிவடைந்து… அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலநூறு கோடி ரூபாய் வருமானமும் நின்று போனது.
பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையை நிறுத்திவிட்டு அதே விலையில் வைலட் நிற ஆவின் டிலைட் பால் பாக்கெட்டினை பசும்பால் எனக் கூறி, அதன் விநியோகத்தை சென்னையில் உள்ள பால் முகவர்களிடம் கட்டாயப்படுத்தியதால் பிரச்னை எழுந்த சமயம், ‘ஆவின் நிறுவனம் சுமார் 910 கோடி ரூபாய் இழப்பில் செல்வதால், அதனை ஈடுசெய்ய புதிய வகை பாலினை அறிமுகம் செய்திருப்பதாக’ நிர்வாக இயக்குநர் வினித் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி, கடந்த டிசம்பர் 18 முதல் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய வகையில், நாளொன்றுக்கு ரூ.81 லட்சம் வீதம் 5.5 மாதங்களில் மட்டும் சுமார் 133 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்பட்டதா… வழங்கப்பட்டிருந்தால், மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட ஊக்கத்தொகை எவ்வளவு என்பதை ஆவின் நிர்வாகம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 2021-ல் திமுக அரசு அமைந்த பிறகு, ஆவின் சுமார் 1,900 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பைச் சந்தித்து ஓட்டை விழுந்த கப்பல்போல் பால் வழங்கிய விவசாய பெருமக்களுக்கான கொள்முதல் தொகை, பால் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான வாடகை, ஊழியர்களுக்கான கொரோனா கால சிறப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்கிட முடியாமல் கடும் நிதியிழப்பில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் உள்ள நிலையில் ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு ஆவினுக்கான பால் கொள்முதல் விலை, விற்பனை விலை, பால் விற்பனைக்கான கமிஷன் தொகை மூன்றையும் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தக்கூடிய வகையில் சட்டமியற்றி, அதனை உடனடியாக அமுல்படுத்துவதோடு, 27 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை போக்குவரத்து கழகங்களைப்போல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 5 மண்டலங்களாக மாற்றி அமைத்து, வீண் விரய செலவுகளை ஏற்படுத்தும் பால்வளத்துறையையும், மாவட்ட துணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர் இடங்களையும் ரத்து செய்து, பால் கொள்முதலை அதிகரிக்க தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பால் மொத்த குளிர்விப்பான் நிலையங்கள், பால் குளிரூட்டும் நிலையங்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அதிரடியாக சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே ஆவின், திராவிட மாடல் ஆட்சியில் முற்றிலுமாக அழிந்து விட்டது என்கிற பழிச் சொல்லுக்கு முதலமைச்சர் ஆளாகமல் இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb