இட ஒதுக்கீடு விஷயத்தில் காங்கிரஸ் செய்ததாகப் பிரதமர் மோடி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமிருந்தால் அவர் நிரூபிக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருக்கிறார்.

முன்னதாக, கடந்த செவ்வாயன்று ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதை, 2004-ல் காங்கிரஸ் ஆட்சியமைத்ததும் முதலாவதாக ஆந்திராவில் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டைக் குறைத்து இஸ்லாமியர்களுக்கு வழங்கியது.

பிரதமர் மோடி

இதில், 2004 முதல் 2010 ஆண்டுகளுக்கு இடையில், ஆந்திராவில் இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை நான்கு முறை செயல்படுத்த முயன்றது காங்கிரஸ். ஆனால், சட்ட தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக அவர்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. 2011-ல் நாடு முழுவதும் அதை செயல்படுத்த நினைத்த காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்து, பிறருக்கு வழங்கும் ஆட்டத்தை ஆடியது. பின்னர், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டிலிருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், மோடியின் இத்தகைய வாய்மொழிப் பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, `எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு மாற்றியதாக மோடி கூறுவது அப்பட்டமான பொய். இத்தகைய பேச்சு அவரின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. இந்திய வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், பிரதமர் அலுவலகத்தை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தியதில்லை. பொறுப்பான பதவியில் இருக்கும் மோடி, இதுபோன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சித்தராமையா

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீடுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் எங்கே கூறியிருக்கிறது… காங்கிரஸின் கீழ் எந்த மாநில அரசு இத்தகைய கொள்கையை அமல்படுத்தியிருக்கிறது… இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசு ஆவணம் ஏதும் இருக்கிறதா… இந்த விவரங்களை நாட்டு மக்களிடம் மோடி முன்வைக்க வேண்டும். இட ஒதுக்கீடுகளைத் தன்னிச்சையாகத் திருத்த முடியாது. சமூக மற்றும் பொருளாதார ஆய்வுகளின் அறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் செய்ய முடியும். மேலும், எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை. ஒரு பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவுகூட இல்லாதது நம் நாட்டுக்கு உண்மையிலேயே சோகமானது.

கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 2பி பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இது இப்போது செய்தது அல்ல. 1974-ல் எல்.ஜி.ஹவனூரால் தொடங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் அறிக்கையின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கிறது. மாநிலத்தில் முன்பு ஆட்சியிலிருந்த பா.ஜ.க அரசோ, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசோ இந்த இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பவில்லை. மேலும், பா.ஜ.க உட்பட யாரும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதத்தின் அடிப்படையில் வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பசவராஜ் பொம்மை அரசு தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்ய முயன்று, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தைப் பெற்றதைப் பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் விட்டதாகத் தெரிகிறது. இஸ்லாமியர்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது போன்ற முக்கிய தகவல்கள்கூட பிரதமரின் கவனத்திலிருந்து தப்பியிருப்பது வருத்தமளிக்கிறது.

கர்நாடகாவில், முந்தைய பா.ஜ.க அரசு, எஸ்.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும், எஸ்.டி பிரிவினருக்கு 3-லிருந்து 5 சதவிகிதமாகவும் உயர்த்தி அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், மார்ச் 14, 2023 அன்று, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் நாராயண ஸ்வாமி, மாநில பா.ஜ.க அரசிடமிருந்து அத்தகைய கடிதம் வரவில்லை என்றும், இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை என்றும் மக்களவையில் தெரிவித்தார்.

மோடி

இந்த முடிவை பிரதமர் மோடி கவனிக்கவில்லையா… மோடியின் புதிய கூட்டாளியான ஹெச்.டி.தேவகவுடாவின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று ஒரு காலத்தில் கூறிய தேவகவுடா, தனது தற்போதைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்தாலும், பிரதமர் மோடி குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்யாதது, அவர் தோல்வியடைந்த தலைவர் என்பதை நிரூபிக்கிறது” என்று தனது X சமுக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.