பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும், அங்கீகரிக்கும் பகுதி… இந்த #HerBusiness. தங்களது புதுமையான சிந்தனைகள், அதைச் செயல்படுத்திய விதம், அணுகுமுறை உள்ளிட்ட பல காரணிகள் மூலம் தொழிலில் ஜெயித்து வரும் இவர்களது வெற்றிக்கதைகள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிதாக உருவெடுக்க வைக்கும்!

வாழ்வில் எல்லாமே இருந்து ஜெயிப்பது பெரிய விஷயமல்ல. எதுவுமே இல்லாதபோதும் தனக்கான பாதையைத் தானே தீர்மானித்து அதில் தனது பயணத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதுதானே ரியல் கெத்து? அப்படிப்பட்ட சிங்கப் பெண்ணாக வலம் வருகிறார் சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணான ஆயிஷா.

ஆயிஷா

`ஸ்மைல் பிளானர்ஸ்’ (Smile Planners) என்ற பெயரில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றை நடத்திவரும் இவர், அதன் வழியாக திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், இன்டிமேட் பார்ட்டிகள் (Intimate parties), கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்திக் கொடுக்கிறார். “பெண்ணா பிறந்துட்டோம். நம்மால என்ன பண்ண முடியும்?” என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு இவரது கதை நிச்சயம் ஊக்கத்தைக் கொடுக்கும்.

“பெண் என்றாலே அவளுக்கானது திருமணம்தான்’ என்றொரு மனநிலை கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள் நான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடனேயே எனக்குத் திருமண நிச்சயம் செய்துவிட்டார்கள். அதன் பின்னர், நிறைய பிரச்னைகள் உண்டாகி, என் பெற்றோர் பிரிந்தனர். பின்னர் ஓராண்டு என் வாழ்வு அப்படியே நகர்ந்தது.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியிருந்த அந்த நேரத்தில், என் அம்மா எனக்கான வெளிச்சக் கதவுகளைத் திறந்தார். `உன்னுடைய வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை. நீ சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது’ என்று ஊக்கம் கொடுத்து என்னை 2013-ம் ஆண்டு இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட்டார்” என்கிறார் ஆயிஷா.

ஈவன்ட் மேனேஜ்மென்ட்

எவ்வளவோ போராட்டத்துக்குப் பிறகு, தன் அம்மாவால் படிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததால் இன்ஜினீயரிங் படிப்பை நன்கு படித்து முடித்து நல்லதொரு வேலைக்குப் போக வேண்டும் என்பதே அப்போது தன் விருப்பமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

“ஆனால், நாள்கள் செல்லச் செல்ல இன்ஜினீயரிங் எனக்கான களம் கிடையாது என்பது எனக்குப் புரிந்தது. எனவே, எனக்குப் பிடித்த விஷயம் என்ன, எது எனக்குச் சிறப்பாக வரும் என்ற தேடலில் இறங்கினேன். எனக்கு… பேசுவது மிகவும் பிடிக்கும். எனவே, கல்லூரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கத் தொடங்கினேன்.

இதன் நீட்சியாக ரோட்டராக்ட் (Rotaract) என்ற அமைப்பின் அறிமுகமும் எனக்குக் கிடைத்தது. உலகப் புகழ் பெற்ற ரோட்டரி சங்கத்தின் ஒரு பிரிவுதான் இந்த ரோட்டராக்ட். கல்லூரி மாணவர்களிடையே தலைமைப் பண்பை மேம்படுத்துவதற்கும், தொடர்புகொள்ளும் திறனை சிறப்பாக்கவும் இந்த அமைப்பு உதவி செய்கிறது. இந்த ரோட்டராக்ட் மூலம் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிறர் எப்படி பேசுகின்றனர் என்பதைக் கவனிக்கவும் என்னால் முடிந்தது” என்கிறார் இவர்.

ஈவன்ட் மேனேஜ்மென்ட்

“அதுவரை டிவியில் மட்டும்தான் தொகுப்பாளர்கள் பேசுவார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில், திருமணங்களில், பிறந்தநாள் பார்ட்டிகள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தொகுப்பாளர்கள் பேசுவார்கள், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்கள் என்பதே அதன் பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.

அதேபோல, நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கார்ப்பரேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முதன்முதலாக எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் 1,000 ரூபாய் சம்பளத்தையும் பெற்றேன். இது எனக்குக் கொடுத்த நம்பிக்கையை சொற்களில் விவரிக்க இயலாது.

இதையடுத்து, ஒருபக்கம் படிப்பைக் கவனித்துக்கொண்டே மறுபக்கம் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்பவர், மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கணிசமாகச் சம்பாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்.

“இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கல்லூரி இறுதியாண்டில் இருக்கும்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம், மாதம் 35,000 ரூபாய் சம்பளத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலையும் கிடைத்தது. `உன்னுடைய அடுத்த மூவ் என்ன? அடுத்து எதை நோக்கி உன் பயணம் இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானித்து விட்டாயா?’ என்று அப்போதுதான் அம்மா என்னிடம் கேட்டார்.

பின்னர், நிறைய யோசித்தேன். ஒரு முழுமையான சுய அலசல் ஒன்றை மேற்கொண்டேன். கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் செய்வது, அதைத் தொகுத்து வழங்குவது, குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொடுப்பது, மிகவும் கிரியேட்டிவ்வாக ஒரு விஷயத்தைச் செய்வது, என்னைச் சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைப்பது, வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்தித்துப் பேசுவது என்று இருந்தவள் நான். எனவே, கிடைத்த சாஃப்ட்வேர் வேலையை எடுத்துக்கொள்ளாமல் எனக்குப் பிடித்ததுபோல பிசினஸ் ஒன்றைச் செய்யத் தீர்மானித்தேன்.

ஈவன்ட் மேனேஜ்மென்ட்

திருமணம், பிறந்தநாள் போன்ற, ஒருவருடைய வாழ்வின் சிறந்த நாள்களின் ஒரு பகுதியாக நாம் இருப்பதற்கு உதவும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையை கையில் எடுக்க முடிவு செய்தேன். பிறரது வாழ்வில் புன்னகையையும் சிரிப்பையும் கொண்டுவரச் செய்யும் பிசினஸ் இது என்பதால், Smile Planners என்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் பிசினஸை எனது கல்லூரியின் இறுதியாண்டில்… அதாவது 2017-ம் ஆண்டில் தொடங்கினேன்“ என்று புன்னகைக்கும் ஆயிஷா, இந்த பிசினஸுக்கு இடையே தனது இன்ஜினீயரிங் படிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார்.

“நான் இந்த நிறுவனத்தைத் தொடங்கியவுடன் முதல் பிசினஸாக சங்கீத் நிகழ்ச்சி ஒன்றுக்கு மேடை அலங்காரம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பட்ஜெட்டே 7,000 ரூபாய்தான். எனவே, மிகக் குறைவான தொகைதான் அதில் எனக்கு லாபமாகக் கிடைத்தது. ஆனாலும், அது முதல் பிசினஸ் என்பதால் லாபத்தை தள்ளி வைத்துவிட்டு எனது நிறுவனத்தின் பெயரை மக்களிடம் எடுத்துச் செல்ல உதவும் துருப்புச் சீட்டாக அதை நான் பார்த்தேன்.

பொதுவாகவே, ஒரு பிசினஸை தொடங்கும்போது முதல் மாதத்திலேயே அது உச்சம் தொட்டுவிடாது. அத்தொழிலில் லாபம் ஈட்ட தொடர் உழைப்பும் பொறுமையும் மிக அவசியம். என் பிசினஸையே எடுத்துக்கொள்ளுங்களேன்… இத்தொழிலை தொடங்கிய புதிதில் ஒரு மாதம் ஈவன்ட் வரும். அதன் பின்னர் கொஞ்சம் டல்லாகும். ஆனால், டல்லாகிறதே என்று நினைத்து நான் என் பிசினஸை பாதியிலேயே விட்டுவிடவில்லை. எங்கே தவறுகள் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து சரிசெய்தேன். அதன் பின்னர், கிடைத்த ஒரு வாய்ப்பைக்கூட நான் விடவில்லை. ஒரு சிறிய பிறந்தநாள் பார்ட்டி ஆர்டர் கிடைத்தாலும் அதைச் சிரத்தையுடன் எடுத்துச் செய்வேன். என் தொடர் உழைப்பைக் கொடுத்துக்கொண்டே வந்தேன். தொழில் தொடங்கிய ஏழு மாதத்துக்குப் பிறகு பிசினஸ் பிக்கப் ஆனது” என்பவர் அதன் பின்னர் கார்ப்பரேட் ஈவன்ட்களிலும் நுழையத் தொடங்கியிருக்கிறார்.

ஈவன்ட் மேனேஜ்மென்ட்

எல்&டி, எரிக்ஸன் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் ஈவன்ட்களை எடுத்துச் செய்யும் வாய்ப்பும் இவரது நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர், பெரிய பெரிய ஈவன்ட்களையும் இவர் எடுத்துச் செய்யத் தொடங்கியிருக்கிறார். இதன் நீட்சியாகத் திருமணம் மற்றும் பல்வேறு விதமான பார்ட்டிகளுக்கும் இவர் ஈவன்ட் பிளானராக செயல்பட்டு வருகிறார். அதேபோல, இன்ஸ்டாகிராமில் smileplanners என்றொரு பக்கத்தைத் தொடங்கி அதன் வழியாகவும் தனது பிசினஸை அடுத்தடுத்த தளங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறார்.

“இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்வைக் கொண்டாட முழு உரிமை இருக்கிறது. எனவே, எங்களை அணுகும் வாடிக்கையாளர்களிடம் எங்களது பட்ஜெட் இதுதான் என்று எந்தவொரு டிமாண்ட்டையும் நாங்கள் வைக்கமாட்டோம். அவர்களது பட்ஜெட்டை கேட்டறிவோம். அது எங்களது அடிப்படை பட்ஜெட்டாக இருந்தால்கூட அதற்கென ஒரு பிரத்யேக டிசைன் ஒன்றை உருவாக்கி அதை அடிப்படையாகக் கொண்டு டிரெண்டியாக அந்த ஈவண்ட்டை நடத்திக் கொடுப்போம். இதை எங்கள் நிறுவனத்தின் தொழில் அறமாக வைத்திருக்கிறோம்“ என்பவர், தற்போது இந்த பிசினஸ் வழியாக ஆண்டொன்றுக்கு 20 லட்சம் ரூபாய் வரைக்கும் டர்ன் ஓவர் செய்கிறார்.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தனது ஈவன்ட் மேனேஜ்மென்ட் பிசினஸை செய்துவரும் இவர், அடுத்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இருக்கிறார். இவரது நிறுவனத்தில் தற்போது 12 பேர் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். இதுதவிர சுமார் 40 பேருக்கு வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் பகுதிநேரப் பணியையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.

ஆயிஷா

“எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த என் அம்மா என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் தங்கைகளுக்கு அவர்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்க வேண்டும். அதற்காக நான் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன். அதேபோல, எனது நிறுவனத்தை உலக மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பெருங்கனவும் எனக்கு இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக எனது வாழ்க்கையின் வழியாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி தட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆசையும் எனக்கிருக்கிறது” என்று நம்பிக்கை ததும்பப் பேசுகிறார் ஆயிஷா.

வெற்றிகள் தொடரட்டும் ஆயிஷா!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.