ஆகிய கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை ஒட்டியிருக்கும் பக்கிரமானியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். அவரது மனைவி கோமதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தன்னுடைய கணவர், இரண்டு மகன்கள் மற்றும் தம்பி ஜெயசங்கருடன் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் சென்றார் கோமதி. வாக்களித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த 11 பேர் கொண்ட கும்பல் கோமதி உள்ளிட்டவர்களை சரமாரியாக தாக்கியது. அதில் கோமதி உள்ளிட்ட 5 பேரும் படுகாயமடைந்தனர். அதையடுத்து அந்த தகவல் கேள்விப்பட்டு அங்கு விரைந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸார், படுகாயங்களுடன் இருந்த 5 பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் படுகாயமடைந்திருந்த கோமதி, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட கோமதி

அதையடுத்து அவரது உடலை உடற்கூராய்வு சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை 21.04.2024 அன்று தனது எக்ஸ் தளத்தில் போட்டிருந்த பதிவில், `கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப்பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே தி.மு.க-வினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, தி.மு.க-வினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினரை இன்னும் இந்த தி.மு.க அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற தி.மு.க-வின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.

இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதையடுடுத்து சமூக வலை தளங்களில் தன்னை தீவிர பா.ஜ.க ஆதரவாளராக வெளிப்படுத்தும் சின்ஹா என்பவர், `பா.ஜ.க-வுக்கு வாக்களித்த குற்றத்திற்காக, தி.மு.க-வினரால் கடலூரைச் சேர்ந்த கோமதி கொலை செய்யப்பட்டிருக்கிறார்’ என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவு போட்டிருந்தார். அந்தப் பதிவை பகிர்ந்த பா.ஜ.க-வினரும், வட மாநிலங்களைச் சேர்ந்த அக்கட்சியின் ஆதரவாளர்களும் தமிழ்நாட்டையும், தி.மு.க-வையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

சின்ஹா

அத்துடன் பா.ஜ.க-வின் மாவட்டப் பொறுப்பில் இருக்கும் ஹரிபிரபாகர் மற்றும் சண்முகம் என்ற இருவரும், அந்த பதிவை பகிர்ந்து, தி.மு.க-வின் சர்வாதிகாரப் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று விமர்சித்திருந்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, `சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் பொய்யானது’ என்றதுடன், வழக்கு குறித்த விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் கடலூர் மாவட்ட போலீஸார். அந்த அறிக்கையில், `கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் போன்றவர்கள் இருந்தனர்.

மற்றொரு புறம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் இருந்தனர். இவர்கள் அனைவருமே ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும், ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவே இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் PS Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 1.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.

கடலூர் போலீஸார் வெளியிட்ட அறிக்கை

குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில் கலைமணி, தீபா (கலைமணியின் மனைவி), ரவி, மேகநாதன் மற்றும் அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும்.மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் வட மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா மற்றும் கடலூரைச் சேர்ந்த ஹரி பிரபாகர், சண்முகம் உள்ளிட்ட மூன்று பேர் மீது பொய் செய்தி பரப்பியது, வன்முயை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீதும் அதே பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர் கடலூர் மாவட்ட போலீஸார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.