உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் ஏப்ரல் 21, 22 தேதிகளில் இந்தியா வரத் திட்டமிடப்பட்டிருந்தது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், எலான் மஸ்க் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் உலகளவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஆலைகள் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் டெஸ்லா ஆலை அமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார்.

டெஸ்லா

இந்தியாவில் டெஸ்லா ஆலையை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் போட்டியில் இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் இருப்பதால், தமிழ்நாட்டில் டெஸ்லா ஆலையை ஈர்க்க மாநில அரசு முயற்சித்து வருகிறது. குஜராத்தில் டெஸ்லா ஆலை அமைக்க பிரதமர் அலுவலகமே முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோக மகாராஷ்டிரா, தெலங்கானா போன்ற மாநிலங்களும் இந்த போட்டியில் இருக்கின்றன.

ஏப்ரல் 23-ம் தேதி டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய கூட்டம் நடைபெறவிருப்பதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எலான் மஸ்க் கட்டாயமாக பங்கேற்க வேண்டும். இதனால்தான் அவரது இந்தியா பயணம் ரத்தாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், எந்த மாநிலத்தில் டெஸ்லா ஆலை அமையப்போகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில், ஏப்ரல் 21, 22 தேதிகளில் எலான் மஸ்க் இந்தியா வரத் திட்டமிட்டிருந்தார். இந்த வருகையின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்தியாவில் டெஸ்லா ஆலை, ஸ்டார்லிங் சேவைகள் பற்றி எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எலான் மஸ்க் – மோடி

இந்த நிலையில், எலான் மஸ்க் தனது இந்தியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தில் இருக்கும் பணிகள் காரணமாக இந்தியா பயணத்தை ரத்து செய்துவிட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “டெஸ்லா நிறுவனத்தில் பணிச்சுமை காரணமாக, எனது இந்தியா பயணம் துரதிஷ்டவசமாக தள்ளிப்போய்விட்டது. இந்தாண்டு பிற்பகுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.