திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த மோகன்ராஜ், அவரின் சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்பாள் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டது, தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கையில், கள்ளக்கிணறு பகுதியில் வசித்த திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார், அவரது நண்பர்களான செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் கள்ளக்கிணறு பகுதியிலுள்ள மோகன்ராஜின் தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதைத் தட்டிக் கேட்டதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் உள்ளிட்ட மூவர் மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினமாள் ஆகிய நான்கு பேரையும் வெட்டிக் கொலைசெய்தது தெரியவந்தது.

தண்டனை

இது தொடர்பாக வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா மற்றும் கொலைக்கு உதவிய வெங்கடேஷின் தந்தை ஐய்யப்பன் அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை எடுப்பதற்காக வெங்கடேஷை கள்ளக்கிணறு பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, போலீஸார்மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு வெங்கடேஷ் தப்ப முயன்றபோது போலீஸார் சுட்டதில் வெங்கடேஷின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. 5 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி வெங்டேஷ்

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், முக்கியக் குற்றவாளிகளான வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா, ஐயப்பன் ஆகிய நான்கு பேருக்கும் ஒரு கொலைக்கு ஓர் ஆயுள் தண்டனை என, ஒவ்வொருக்கும் தலா 4 ஆயுள் தண்டனை, தலா ரூ.1,000 அபராதமும், வெங்கடேஷின் சகோதரர் செல்வத்துக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.