பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் ஆலத்தூர் தொகுதிக்குட்பட்ட குன்னங்குளம் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆலத்தூர் தொகுதி வேட்பாளர் சரசு,  திருச்சூர் வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி, பொன்னாணி தொகுதி வேட்பாளர் நிவேதிதா சுப்பிரமணியன், மலப்புறம் வேட்பாளர் அப்துல் சலாம், சாலக்குடி தொகுதி வேட்பாளர் உன்ணி கிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “விஷூ புண்ணிய தினத்தில் பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மோடியின் கியாரண்டி உள்ளது.  நாட்டில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. தென்னிந்தியாவுக்கு வர உள்ள புல்லட் ரயில்கள் தொழிலின் வேகத்தை அதிகரிக்கும். இது நாட்டின் எதிர்காலத்தை, உங்களின், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிச்சயிக்கும் தேர்தல். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டினுடைய மதிப்பு உயர்ந்துள்ளது. இன்று யாராவது வெளிநாட்டுக்குச் சென்றால் நம் நாட்டுக்கு கிடைக்கும் மரியாதை அங்கு அவர்களுக்கு தெரியும். வெளிநாட்டில் சிக்கும் நம் நாட்டை சேர்ந்தவர்களை மீட்டுக் கொண்டுவரும் சக்தி மிகுந்த நாடாக இந்தியா மாறி உள்ளது. நம் நாட்டுக்கு தேவையானதை உற்பத்தி செய்வதுடன், வேறு நாடுகளுக்கு உதவியும் செய்கிறோம்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

கடந்த 10 ஆண்டுகளில் பெரிய விஷயங்கள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன என நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல, கடந்த 10 ஆண்டு ஆட்சியில் நீங்கள் பார்த்தது சினிமாவின் வெறும் டிரைலர்தான். இன்னும் நிறைய வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. நம் நாட்டை இன்னும் அதிக தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் கேரளாவுக்கு 36 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுத்துள்ளோம். அதில் கேரளாவின் வேகம் போதவில்லை. பா.ஜ.க ஆட்சியில் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் கேரளா அரசு வளர்ச்சி பணிகளை தடை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது அவர்களுடைய சுபாவம் ஆகும். அவர்கள் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தையும், திரிபுராவை நசுக்கினார்கள். இப்போது அந்த பணியை கேரளாவில் செய்து கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் வெளிப்படையாகவே அரசியல் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கல்லூரி வளாகங்கள் சமூக விரோதிகளின் மையமாக மாறிவிட்டன. கேரளாவில் குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பு இல்லை.

பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடை

கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்து, திருமணம் போன்றவற்றை நடக்கவிடாமல் செய்துள்ளனர். இதுபோன்று நாட்டில் நடந்த ஊழல்களின் பணம் 17 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு பறிமுதல் செய்து, உரிய மக்களிடம் ஒப்படைத்துள்ளது. அதுபோன்று கேரளாவிலும் மக்களின் பணத்தை திரும்ப பெற்று தருவோம். காங்கிரஸின் பெரிய தலைவர் ஒருவர் உள்ளார். அவர் உத்தரப்பிரதேசத்தில் சொந்த குடும்பத்தின் சீட்டின் மரியாதையை காப்பது இயலாத காரியம் என நினைத்து, கேரளாவை புதிய மையமாகக் கொண்டுள்ளார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் கூட்டணி வைத்துள்ளார். அந்த தலைவர் கூட்டுறவு ஊழலை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கமாட்டார். உங்கள் உரிமைக்காக எந்த கருத்தும் சொல்ல மாட்டார்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.