மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் என்று தீவிரம் காட்டி வருகின்றன. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரமே இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(உத்தவ்) கூட்டணி இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்காமல் இருக்கிறது. காங்கிரஸ் கேட்ட சில தொகுதிகளுக்கு சிவசேனா தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அக்கூட்டணியில் புகைச்சல் இருந்து கொண்டிருக்கிறது. அதே போன்று பா.ஜ.க கூட்டணியிலும் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. கல்யான், ரத்னகிரி உட்பட 4 தொகுதியில் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. இப்பிரச்னைகளால் நாடு முழுவதும் சில முக்கிய தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியை சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு ஒதுக்கி இருக்கிறது.

ராகுல் காந்தியுடன் பிரியங்கா

ஆனால் இரண்டு தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அமேதி தொகுதிக்கு பா.ஜ.க ஏற்கனவே மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை அறிவித்துள்ளது.. சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதியில் அவர் இம்முறை போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதனால் அதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் இரண்டு தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்கிறது. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் மீண்டும் எம்.பி.யாக வேண்டும் என்று அமேதி மக்கள் விரும்புகின்றனர் என்று ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் மற்றொரு வி.ஐ.பி.தொகுதியாக இருக்கும் கைசர்கஞ்ச் தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் இன்னும் பா.ஜ.க சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர். இதனால் பா.ஜ.க மீண்டும் பிரிஜ் பூஷனை வேட்பாளராக நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமாஜ்வாடி கட்சியும் இத்தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை.

பிரிஜ் பூஷன்

அலகாபாத் தொகுதிக்கும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இத்தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ரேவதி ராமனை வேட்பாளராக நிறுத்தும் என்று தெரிகிறது. இதற்கு முன்பு இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ரிதா பகுஹுனா வெற்றி பெற்றார். அவரை பா.ஜ.க இன்னும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. மறைந்த தலைவர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் கன்சிராம் போன்ற தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற புல்புர் தொகுதிக்கும் இன்னும் அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் நாசிக் தொகுதிக்கு வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. அத்தொகுதிக்கு மாநில அமைச்சர் சகன் புஜ்பாலை நிறுத்த பா.ஜ.க முயன்று வருகிறது. ஆனால் சிவசேனா(ஷிண்டே) தற்போது எம்.பி.யாக இருக்கும் கோட்சேயை மீண்டும் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. இதனால் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. ரத்னகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயை நிறுத்த பா.ஜ.க முயன்று வருகிறது. ஆனால் அத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா(ஷிண்டே) கூறிக்கொண்டிருக்கிறது.

அமித் ஷா, ஷிண்டே, பட்னாவிஸ்

ஹிமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதிக்கு பா.ஜ.க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. இத்தொகுதியில் முன்னாள் முதல்வர் விர்பத்ர சிங் மனைவி பிரதிபா எம்.பி.யாக இருக்கிறார். ஆனால் அவர் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் இத்தொகுதிக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

பஞ்சாப்பில் உள்ள அனந்த்பூர் சாஹிப் தொகுதி முக்கியமான ஒன்றாகும். இங்கு இப்போது காங்கிரஸ் கட்சியின் மனீஷ் திவாரி எம்.பி.யாக இருக்கிறார். காங்கிரஸ் இது வரை 228 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் அனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க மற்றும் சிரோமணி அகாலி தளமும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி மட்டும் வேட்பாளரை அறிவித்து இருக்கிறது.

இப்படி பல ஸ்டார் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால், யார் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.