கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி வேட்பாளராகியிருக்கிறார். இந்நிலையில், கரூர் வெங்கமேடு அண்ணா சிலை அருகில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

“சோனியா காந்தி, ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆகியோரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி. கரூர் தொகுதிக்காக பலமுறை நாடாளுமன்றத்தில் பேசி, போராடி, சஸ்பெண்ட் ஆனவர். நாடாளுமன்றத்தில் எதிர்த்து கேள்வி கேட்டால், சஸ்பெண்ட். வெளியே எதிர்த்து கேள்வி கேட்டால் சிறை என்ற நிலைதான் உள்ளது. உடல்நிலை சரியில்லை என்றாலும் இவ்வளவு நாள்களாக செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெயில் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் வெளியே வந்து விடுவார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், கரூரில் போட்டியிடாமல் அண்ணாமலை கோவைக்குச் சென்றுவிட்டார். ஒரு தகரப்பெட்டி, இரண்டு பேன்ட்டுகளுடன் போனவர். அண்ணாமலையும் சரி, அவரது கட்சியும் சரி பொய் மட்டுமே பேசி வருகின்றனர். 20,000 புத்தகங்கள் படித்ததாக அண்ணாமலை கூறுகிறார். ஒரு மனிதன் ஐந்து வயதில் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு இரண்டு புத்தகம் படித்தால்தான் அது சாத்தியம். புத்தகங்களை வாசித்ததாகக் கூறி ஏதேதோ பேசுகிறார்.

பிரசாரம் மேற்கொள்ளும் கனிமொழி

இதுதான் தம்பி உனது தகுதி. எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. எல்லோரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொல்லி கையில் இருந்த ரூ.1,000, 500-யையும் உங்களிடம் இருந்து பிடுங்கிவிட்டார்கள். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ரூ. 410-ஆக இருந்த சிலிண்டர், தற்போது 1,100 ரூபாய்க்கு விற்கிறது. மானியம் என்று சொல்லிவிட்டு இரண்டு மடங்கு விலை ஏற்றிவிட்டனர். குழப்பத்தில் கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரிக்கு, சிறு வியாபாரிகள் முதல், சிறிய தொழிற்சாலைகள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால், பா.ஜ.க ஆட்சி அதானி, அம்பானி போன்ற பணக்காரர்களுக்கான ஆட்சி. அம்பானி வீட்டு கல்யாணத்திற்காக பத்து நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியின் சாதனை. கல்விக் கடன் ரத்து இல்லை. விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலையும் இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரூ. 68,607 கோடி ரூபாய் கடனை பா.ஜ.க ஆட்சி ரத்து செய்துள்ளது. கரூர் தொகுதி மக்களுக்காக ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட பாலங்கள் கொண்டு வந்த ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களிப்பீர்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.