ருத்துராஜ் கெய்க்வாட் சென்னையின் கேப்டன் ஆகியிருக்கிறார். சென்னை அணியில் ருத்துராஜின் பயணம் ஆச்சர்யமானது. ஜீரோவில் ஆரம்பித்து அந்த அணியின் கேப்டன் எனும் அந்தஸ்த்துக்கு உயர்ந்திருக்கிறார். மிக முக்கியமாக தோனி எனும் சகாப்தத்தை ரீப்ளேஸ் செய்யப்போகிறார். இந்நிலையில் சென்னை அணிக்குள் அவரின் பயணம் எப்படி இருந்திருக்கிறது என்பதைப் பற்றிய ஓர் அலசல்.

Ruturaj Gaikwad

‘அமைதிப்படை’ படத்தின் அமாவாசை கேரக்டரில் நிரம்பியிருக்கும் வில்லத்தனத்தையும் குசும்பையும் நீக்கிவிட்டால் அந்த கேரக்டரோடு அப்படியே ருத்துராஜை பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். 2019-ம் ஆண்டு சென்னை அணிக்குள் ருத்துராஜ் உள்ளே வந்தபோது அவரிடம் எதுவுமே இல்லை. வெறுமென அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்குதான் ஏலத்தில் எடுக்கப்பட்டார். பல போட்டிகளில் பென்ச்சில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

2020 சீசன் ருத்துராஜின் கரியரில் முக்கியமான சீசன். அது ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போன்றே அமைந்திருந்தது. அந்த சீசன் சி.எஸ்.கே-வைப் பொருத்தவரை ஒரு கொடுங்கனவு. மகா மட்டமாக அந்த சீசனில் ஆடியிருந்தது. முதல் முறையாக ப்ளே ஆப்ஸூக்குக் கூட செல்லாமல் சென்னை அணி வெளியேறியது. அந்த சீசனில் தொடக்கத்திலிருந்தே சென்னை அணி அடி வாங்கியிருக்கும். எந்த காம்பீனேஷனும் செட் ஆகாமல் பென்ச்சில் இருக்கும் வீரர்களை தோனி கன்னாபின்னாவென பயன்படுத்தியிருப்பார்.

தோனியே நிதானம் இழந்த சீசன் அது. அதில்தான் ஓப்பனிங் பேட்டரான ருத்துராஜை நம்பர் 4 மற்றும் 5-ல் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோனி இறக்கியிருப்பார். அந்த இரண்டு போட்டிகளிலுமே முறையே 0, 5 என்றே ருத்துராஜ் ஸ்கோர் செய்திருப்பார். ஒரு போட்டியில் ஸ்டம்பிங். ஒரு போட்டியில் ரன் அவுட். அத்தோடு ருத்துராஜ் டிராப். அந்தச் சமயத்தில் வேறு சில இளம் வீரர்களையும் பயன்படுத்திப் பார்த்து தோனி விரக்தியடைந்திருந்தார்.

அப்போதுதான் ஒரு போட்டிக்குப் பிறகு, “இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. அவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை” எனக் காட்டமாக விமர்சனம் செய்தார் தோனி.

Ruturaj Gaikwad | ருத்துராஜ் கெய்க்வாட்

அதன்பிறகும் தோல்விகள் தொடர்ந்தன. வேறு வழியில்லாமல் ருத்துராஜூக்கு மீண்டும் லெவனில் இடம் கிடைத்தது. இந்த முறை அவரின் ஆஸ்தான ஒப்பனிங் ஸ்லாட்டிலேயே இறங்கினார். ஓப்பனராக முதல் போட்டியிலேயே டக். ஆனாலும், ஓய்ந்துவிடவில்லை. அந்த சீசனில் சி.எஸ்.கே ஆடிய கடைசி 3 போட்டிகளையும் வென்றது. அந்த 3 போட்டிகளிலும் ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்திருந்தார். சென்னை அணியில் விதையாக விழுந்து ருத்துராஜ் முளைக்கத் தொடங்கிய தருணம் அதுதான். இந்த 3 இன்னிங்ஸ்களும் அணியில் அவருக்கென ஓப்பனிங் ஸ்லாட்டைப் பெற்றுக்கொடுத்தது.

2021 சென்னை அணியின் கம்பேக் சீசன். அந்த சீசனில் சென்னை அணி சாம்பியன். சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் ருத்துராஜ்தான். அந்த சீசனில் 635 ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். டு ப்ளெஸ்ஸி + ருத்துராஜ் ஓப்பனிங் கூட்டணி சாதனைக் கூட்டணியாக மாறியது.

2022-ல் மெகா ஏலம் நடக்கவிருந்தது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களைத் தக்க வைக்க வேண்டும். சென்னை அணி ஜடேஜா, தோனி, ருத்துராஜ் என மூவரையும் தக்கவைத்தது. 2019 இல் ருத்துராஜின் சம்பளம் 20 லட்சம். 2022-ல் அணியில் ருத்துராஜின் சம்பளம் 6 கோடி. ருத்துராஜை சென்னை அணி வருங்காலத்திற்கான வீரராகப் பார்க்கிறது. அவருக்கென பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது என்பது இதன்மூலம் தெரிய வந்தது. 2022 சீசனில் ஜடேஜா கேப்டனாக்கப்பட்டார். ஆனால், அந்த முடிவு சரியானதாக இல்லை. ஜடேஜாவால் கேப்டன்சியை சரியாகக் கையாள முடியவில்லை. தோனியே மீண்டும் கேப்டனானார். தோனி ஓய்வை நோக்கி நகர்கிறார், ஜடேஜா கேப்டன் மெட்டீரியல் இல்லை. மிச்சமிருப்பது ருத்துராஜ் மட்டும்தான்.

Ruturaj Gaikwad

ருத்துராஜ்தான் வருங்கால கேப்டன் என்பது 2022 சீசனிலிருந்தே பேசப்பட ஆரம்பத்துவிட்டது. பயிற்சியாளர் ப்ளெம்மிங்குமே அப்போதிருந்தே ருத்துராஜூக்கு கேப்டன்சி வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

2023 சீசனில் ருத்துராஜ் 590 ரன்களை அடித்திருந்தார். கான்வே + ருத்துராஜ் கூட்டணி அதிகம் கலக்கியிருந்தது. சென்னை அணி சாம்பியன். தோனி விடைபெறுவார் என நினைக்கையில் ட்விஸ்ட் கொடுத்தார். ஆனாலும் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். பேட்டன் ருத்துராஜின் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது.

Ruturaj Gaikwad

அன்று ஸ்பார்க் இல்லையென ஒதுக்கப்பட்ட ருத்துராஜ்தான் இனி சி.எஸ்.கே-வின் கேப்டன். அவர்தான் அணியை முன் நின்று வழிநடத்தவிருக்கிறார். தோனிக்குப் பிறகு சி.எஸ்.கே அணிக்குள் வெகு விரைவில் செல்வாக்கைப் பெற்ற வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்தான்.

எவ்வளவுக்கு எவ்வளவு வீழ்ச்சிகளையும் தூற்றுதல்களையும் சந்திக்கிறோமோ அதே அளவுக்கு உச்சத்தையும் அடைவோம், கடின உழைப்பு இருந்தால்! இதற்கு ருத்துராஜ்தான் பெரிய உதாரணம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.