Girl child adoption rate increases:

இந்தியாவில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் விதமாக, பெண் குழந்தைகளைத் தத்தெடுக்கும் எண்ணிக்கை 11 மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்பெல்லாம் குழந்தையில்லாத தம்பதிகள் தங்களின் வாரிசாக பெரும்பாலும் ஆண் குழந்தைகளையே தத்தெடுத்து வந்த நிலையில், கடந்த இரண்டாண்டுகளில் இந்நிலை மாறியுள்ளது.

Child Adoption (Representational Image)

கடந்தாண்டு நவம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, இந்து வாரிசுரிமைகள் மற்றும் பராமரிப்பு சட்டம், 1956-ன் படி வழங்கிய புள்ளிவிவரத்தில், இந்திய அளவில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே இந்து மதத்தைச் சேர்ந்த பெற்றோர் விரும்பி தத்தெடுக்கின்றனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, 2021-2023 வரையிலான காலகட்டத்தில், 11 மாநிலங்களின் புள்ளிவிவரங்களின்படி, 15,486 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9,474 பெண் குழந்தைகள், 6,012 ஆண் குழந்தைகள். இதில் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 7,496 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,966 பெண் குழந்தைகள் மற்றும் 2,530 ஆண் குழந்தைகள் ஆவர். சண்டிகரில், 114 பெண் குழந்தைகள், 53 ஆண் குழந்தைகள் என மொத்தம் 167 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, தத்தெடுக்கப்பட்ட 1,671 குழந்தைகளில் 985 பெண் குழந்தைகள், 686 ஆண் குழந்தைகள்.

Girl child adoption rate increases

குறிப்பாக, தம்பதிகள் குழந்தைகளை 6 வயதுக்குள்ளாகவே தத்தெடுக்க (Adoption) விரும்புகின்றனர் என்ற கூடுதல் தகவலும் இந்தப் புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வருகிறது. மத்திய தத்தெடுப்பு வள முகமை (Central Adoption Resource Agency – CARA) அளித்த தகவல்களின்படி, தம்பதிகளில் 69.4% பேர் 0 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளையும், 10.3% தம்பதிகள் 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளையும், 14.8% தம்பதிகள் மற்றும் 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று விதிவிலக்காக தெலங்கானாவில் ஆண் குழந்தைகளை அதிகம் தத்தெடுத்துள்ளனர். தத்தெடுக்கப்பட்ட 242 குழந்தைகளில் 48 பேர் மட்டுமே பெண் குழந்தைகள், 194 ஆண் குழந்தைகள். இந்து மதத்தில் தத்தெடுப்பு முறைகள் எளிமையாக இருப்பதால் அந்த மதத்தைச் சேர்ந்த தம்பதிகள் அதிகளவில் குழந்தைகளைத் தத்தெடுக்கின்றனர்.

Girl child (Representational Image)

மேலும், அக்டோபர் 2023 நிலவரப்படி, குழந்தைகளைத் தத்தெடுக்க பதிவுசெய்து காத்திருக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை 30,669. ஆனால், 2,146 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்க தயார் நிலையில் உள்ளனர் என்றும் தத்தெடுப்பு வள மையம் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.