நாயகத்தன்மை நிறைந்த கேங்ஸ்டர் கூட்டங்களை பல படங்களிலும் பார்த்திருப்போம். அப்படி ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தைப் போன்றதுதான் மும்பை இந்தியன்ஸ் அணி.

பல சமயங்களில் அந்த கேங்ஸ்டர் கூட்டம் தங்களின் ஏரியாவை தங்களின் கண்ணசைவுக்குள் வைத்திருக்கும். சில சமயங்களில் எதிர் கேங்கிடம் கோட்டைவிட்டு விடுவார்கள்.

Mumbai Indians

ஆனாலும் விடாப்பிடியாக போராடி தாங்கள் விட்ட இடத்தை மீண்டும் எப்படியாவது பிடித்துவிடுவார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு இரத்தக்கறை படியாத ஊதா ஜெர்சி அணிந்த கேங்ஸ்டர் கூட்டம்தான். இந்த முறை அவர்கள் தாங்கள் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார்களா என்பதே மிகப்பெரிய கேள்வி.

கடந்த சீசன் மும்பை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தட்டுத்தடுமாறிதான் ஆடியிருந்தது. நிறைய போட்டிகளில் தோற்றிருந்தது. ஓடும் ட்ரெயினை விரட்டி போய் கடைசியாக ஏறும் ஹீரோவைப் போல நான்காவது இடத்தைப் பிடித்துதான் ப்ளே ஆப்ஸூக்கு தகுதி பெற்றிருந்தது. லக்னோவை எலிமினேட்டரில் வீழ்த்தி குஜராத்திடம் குவாலிபையரில் அடி வாங்கியது. மும்பையை பொறுத்தவரைக்கும் கடந்த சீசன் அவர்களுக்கு முழுமையான திருப்தியான சீசனாக இருக்கவில்லை. முழுமையாக ஒரு யூனிட்டாக பேட்டிங், பௌலிங் இரண்டிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. நிறைய பிரசனைகள் இருந்தது. அனுபவம் குறைவான வீரர்கள் அதிகம் இருந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை. போதாக்குறைக்கு காயம் காரணமாக பும்ராவும் அணியில் இல்லை. இப்படி மும்பை கப்பலில் எக்கச்சக்க ஓட்டைகள் இருந்தது. ஆனாலும் எப்படியோ சமாளித்து ப்ளே ஆப்ஸ் வரை முன்னேறிவிட்டனர்.

இந்த முறை அந்த அணியில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம் ஹர்திக் பாண்ட்யாவை. மும்பையிலிருந்து வெளியேறி குஜராத்துக்குக் கேப்டனாகி அந்த அணியை சாம்பியனாக்கியவரை மீண்டும் மும்பை அணி ட்ரேடிங் முறையில் உள்ளே கொண்டு வந்து கேப்டனாக்கியிருக்கிறது. இனி ஹர்திக்தான் தலைவர். ரோஹித் ஒரு சாதாரண வீரர். இந்த மாற்றமே பல சர்ச்சைகளையும் கிளப்பியது. ரோஹித் தரப்பில் கொஞ்சம் அதிருப்தியாக இருப்பதெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தது.

Hardik Pandya

இருவரின் ரசிகர்களுமே சமூக வலைதளங்களில் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். ஆனால் ரோஹித், ஹர்திக் என இருவருமே தொழில்ரீதியாக ஒரு பக்குவத்தை எட்டியவர்கள் என்பதால் இந்த சர்ச்சைகளெல்லாம் அணிக்குள் எந்த குந்தகத்தையும் விளைவிக்காது என நம்பலாம்.

சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன், க்ரீன் ஆகியோர் கடந்த சீசனில் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் ஆடியிருந்தாலும் அது போதுமானதாக இல்லை. க்ரீன் இந்த முறை இல்லை. அவரை வெளியே தள்ளிவிட்டுதான் ஹர்திக்கை அணிக்குள் எடுத்திருக்கிறார்கள். சூர்யகுமாரும் இஷன் கிஷனும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக ஆடியாக வேண்டும். இஷன் கிஷன் ஓப்பனிங்கில் அதிரடியான தொடக்கம் கொடுக்கும்பட்சத்தில். அந்த தொடக்கத்தை சூர்யகுமார், ஹர்திக், திலக் வர்மா போன்றோர் அப்படியே கடத்தி பெரிய ஸ்கோரை எடுக்க எளிதில் உதவுவார்கள்.

மும்பை அணியைப் பொறுத்தவரைக்கும் ரோஹித் சர்மாவுக்குதான் இந்த சீசன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. கேப்டனாக இல்லாமல் வெறும் வீரராக மும்பை அணி அவரை எப்படி கையாளப் போகிறது என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். ரோஹித் சர்மாவை இம்பாக்ட் ப்ளேயராகக் கூட பயன்படுத்தலாம். ஆனால், எப்படி பயன்படுத்தினாலும் இந்த முறை ரோஹித் நன்றாகச் செயல்பட்டு அதிகப்படியான ரன்களை எடுத்தே ஆக வேண்டும். குறைந்தபட்சமாக இந்த சீசனில் 400 ரன்கள் என்கிற இலக்கையாவது அவர் எட்ட வேண்டும். ஏனெனில்,

Rohit Sharma

2017 முதல் கடந்த 7 சீசன்களில் ஒரே ஒரு சீசனில்தான் ரோஹித் 400 ரன்களைக் கடந்திருக்கிறார். மற்ற எல்லா சீசன்களிலுமே சொதப்பல்தான். கேப்டனாக இல்லாத ரோஹித்தை சுமாருக்கும் கீழாக பேட்டிங் ஆடும் ரோஹித்தை மும்பை அணி எதற்காக தக்க வைக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை ரோஹித்தான் இந்த சீசனில் கொடுக்க வேண்டும்.

தேங்காய் உடைபடுவது போல பிரச்னைகளும் உடைபட வேண்டுமென சிம்பாளிக்காக சீசனைத் தொடங்கியிருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. ஒரு கேப்டனாக குஜராத் அணியை ஹர்திக் பிரமாதமாக வழிநடத்தியிருந்தார். இத்தனைக்கும் அந்த அணியில் அத்தனை ஓட்டைகள் இருக்கும். இருந்தும் பக்குவமாக பிரச்னைகளை ஹேண்டில் செய்து அசத்தியிருந்தார் ஹர்திக். அதே பக்குவத்தைதான் ஹர்திக் இங்கேயும் வெளிக்காட்ட வேண்டும். தனிப்பட்ட முறையில் முன்பு எப்படி பேட்டிங், பௌலிங் இரண்டிலும் மும்பை அணியின் வெற்றிக்கு பங்களித்தாரோ அதையேதான் இந்த சீசனிலும் செய்ய வேண்டும். கூடவே டிம் டேவிட், டிவால்ட் ப்ரெவிஸ் போன்ற அதிரடி கூட்டாளிகள் இருப்பதும் ஹர்திக்கிற்கு பெரிய பலம்.

Bumrah

கடந்த முறை மும்பை அணி சார்பில் பியூஸ் சாவ்லா மட்டுமே 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவருக்குப் பிறகு மெத்வால் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மற்ற பௌலர்களால் விக்கெட்டுகளை வீழ்த்தவே முடியவில்லை. பேட்டிங் ஓரளவுக்கு வலுவாக இருந்தும் மும்பை அணி கடந்த சீசனில் சொதப்பியதற்குக் காரணம் அவர்களின் பௌலிங்தான். அவ்வளவு சுமாராக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பந்துவீச்சு படையை வழிநடத்தி செல்லும் பும்ரா இல்லாமல் போனது. இந்த சீசனில் பும்ரா முழு உடற்தகுதியுடன் தயாராக நிற்கிறார். எதிரணி வீரர்களின் பாதங்களைக் குறிவைத்து ஸ்டம்புகளை சிதற செய்யும் யார்க்கர்கள் சரியாக இறங்கும் பட்சத்தில் அது மும்பை அணிக்கு பெரிய பலமாக இருக்கும். பும்ராவுடன் டெட்லி காம்போவாக ஓவர்சீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை இறக்கவும் மும்பை ஏகப்பட்ட சாய்ஸ்களை வைத்திருக்கிறது.பெஹ்ரண்டாப், மதுசங்கா, நுவான் துஷாரா, கோட்ஷி என திறன்மிக்க வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கோட்ஷி உலகக்கோப்பையில் இந்திய மைதானங்களில் கலக்கியிருந்தார். நுவான் துஷாரா இப்போதுதான் ஹாட்ரிக் எடுத்து அசத்தியிருக்கிறார். இந்திய வேகம் + ஓவர்சீஸ் வேகம் என்கிற மும்பையின் டெட்லீ காம்போ சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணையவிருக்கிறது.

புதிய தலைவனின் கீழ் இந்த கேங்ஸ்டர் கூட்டம் வேட்டைக்கு இறங்கப்போகிறது. தாங்கள் இழந்ததை தாங்கள் கௌரவமாக நினைக்கும் அந்தக் கோப்பையை இந்த கேங்ஸ்டர் கூட்டம் எட்டிப்பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.